prime Minister Modi harshly criticized dmk in Madurai
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, மதுரை மண்டேலா நகர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று (01-26) தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘வெற்றிவேல், வெற்றிவேல், வெற்றிவேல்...’ என்று தமிழில் கோஷமிட்டு தனது உரையைத் தொடங்கினார். அதில் அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டின் என் அன்புச் சொந்தங்களே, அனைவருக்கும் வணக்கம். முதன்மையாக நான் என் அன்னை மீனாட்சிக்கும், ஐயன் சுந்தரேஸ்வரருக்கும் என் தலை தாழ்த்தி வணங்குகின்றேன். இது பாண்டிய நாடு, வீரம் விளைகின்ற பூமி. இங்கே வருவதற்கு முன்பாக நான் திருப்பரங்குன்றம் சென்றிருந்தேன். முதல் படை வீட்டுக்கு சொந்தக்காரன் முருகனை தரிசனம் செய்வது ஒரு தெய்வீகமான அனுபவமாக இருந்தது. நான் தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் நல்வளத்துக்காக இறைவனிடம் வேண்டினேன். அதே வேளையில் என் இதயம் கனத்தது. பூர்ணசந்திரன் என்ற இளம் பக்தன் உயிர் தியாகம் செய்தார் என்பதை நான் நினைத்து பார்த்தேன். இன்று நான் அவருடைய மனைவி இந்துமதி பூர்ண சந்திரனையும் அவர்களுடைய இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளையும் சந்தித்து வந்தேன். அவர்களுடைய தீவிரமான துக்கத்தை என்னால் உணர முடிந்தது. என்னுடைய ஆழமான இரங்கலை நான் அவர்களிடம் தெரிவித்து விட்டு வந்தேன். பூர்ணசந்திரனின் ஆன்மா அமைதி அடைய நான் என் உருக்கமான பிரார்த்தனைகளை முருகனின் திருவடிகளில் அர்ப்பணம் செய்கின்றேன். திமுக அரசாங்கத்தின் நேயமற்ற தன்மை காரணமாகவே இது நடந்திருக்கிறது என்பது வலியை ஏற்படுத்துகின்றது.
திமுக என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும். ஆனால் இறுதியில் வாய்மையே வெல்லும். என் அப்பனின் முருகனின் பக்தர்கள் வெல்வார்கள். நாவில் இனிக்கும் தமிழுக்கும் நாசியில் மணக்கும் மல்லிகைக்கும் பெயர் போனது நம்முடைய மதுரை மண். எனதருமை மதுரைச் சொந்தங்களே, நீங்கள் இங்கே என் மீது பொழிகின்ற இந்த பேரன்பு மலேசியாவிற்கு நான் கடந்த மாதம் சென்றிருந்ததை எனக்கு நினைவூட்டுகின்றது. மலேசியாவில் என் மீது பொழிந்த நேசம், பாசம், அன்பும், ஆதரவும், அபூர்வமானவை. தமிழ் கலாச்சாரத்தை அங்கே ஆதரிக்க வேண்டி ஏற்கனவே மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை ஒன்றை நாங்கள் ஏற்படுத்தி இருக்கின்றோம். இப்போது அங்கே திருவள்ளுவர் மையம் ஒன்றையும் நாங்கள் அமைத்து வருகின்றோம். தமிழ்நாட்டிலே சிலர் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இங்கே திரண்டிருக்கின்ற இந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் கூட்டத்தை பார்த்த பிறகு அவர்களின் கனவுகள் எல்லாம் கற்பனை கோட்டைகளாக கானல் நீராக மாறி போய்விடும். இந்த தேர்தல், மாநிலத்திற்கு ஒரு திருப்புமுனை என்பதை மக்களாகிய நீங்கள் நன்கறிவீர்கள். தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மனதிலே தீர்மானம் செய்துவிட்டார்கள் என்பதை என்னால் கண்கூடாக காண முடிகின்றது. திமுக வெளியேற்றப்பட்டாக வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்து விட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை மக்கள் மிக நன்றாக தெளிவாக அறிவார்கள். தமிழ்நாட்டில் அடுத்த அரசாங்கம் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசாங்கம் தான் என்பதை நான் உங்கள் கண்களிலே காண்கிறேன்.
25 ஆண்டு காலத்திற்கு பிறகு 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மக்கள், திமுகவிற்கு ஆதரவாக முழு பெரும்பான்மையை அளித்தார்கள். ஆனால் நல்லாட்சியை அவர்களால் அளிக்க முடியவில்லை. அவர்கள் மாநிலத்தை கொள்ளை அடித்தார்கள், குடும்ப அரசியலை முன்னெடுத்தார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை மண்ணோடு மண்ணாக்கினார்கள். எம்ஜிஆருக்கு உறுதுணையாக உற்ற துணையாக நின்றது மதுரை மாநகர். ஆகையால்தான் திமுகாவிற்கு மதுரை என்றால் வேப்பங்காயாக இருந்து வந்திருக்கிறது. திமுகதான் மதுரைக்கு மாஃபியா, கொள்ளைக்கூட்ட அரசியலை அறிமுகப்படுத்தியது. மோசமான சாலைகள், கேவலமான கழிவுநீர் வடிகால், கழிவுப்பொருள் மேலாண்மை இல்லாமை ஆகியவற்றையே அவர்கள் அளித்தார்கள். சுத்தம், சுகாதாரம், தூய்மை தரவரிசையில் மதுரையை தரைமட்ட அளவிற்கு கொண்டு போனார்கள். ஊழல் காரணமாக மதுரை நகர மேயரே பதவியை துறக்க நேர்ந்தது. இதுதான் அவர்களுடைய மாடல். பணம் நமக்கு, பிரச்சனைகள் மக்களுக்கு இது தான் அவர்களுடைய மாடல்.
திமுக தாங்களும் ஏழைகளுக்கு பணியாற்ற மாட்டார்கள், மற்றவர்களையும் பணியாற்ற விட மாட்டார்கள். பிரதம மந்திரி ஊரக பகுதி வீட்டு வசதி திட்டத்தின்படி தமிழ்நாட்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இந்த திட்டம் காரணமாக குடும்பங்களுக்கு சொந்தமாக கௌரவமாக வாழ ஒரு வீடு கிடைத்திருக்கிறது. அதே வேளையில் மூன்று லட்சம் வீடுகள் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கின்றது. ஏனென்றால் திமுக அரசாங்கம் இன்னமும் கள ஆய்வுகளை மேற்கொள்ளாமல் செயல்பாட்டை இழுத்தடித்துக் கொண்டிருப்பதுதான் காரணம். திமுகவின் சில்லறைத்தனமான அரசியல் காரணமாக ஏன் லட்சக்கணக்கான ஏழை குடும்பங்கள் அவதிப்பட வேண்டும்? தமிழ்நாடு ஒரு கரைப்பகுதி மாநிலம், இங்கே அளவில்லாத சாத்திய கூறுகள் இருக்கின்றன. ஆனால் காங்கிரஸும் திமுகவும் 2014ஆம் ஆண்டுக்கு முன்னால் கூட்டாட்சி நடத்தியபோது இவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். 2014ஆம் ஆண்டிற்கு பிறகு நாங்கள் சென்னை துறைமுகம் மதுரவாயில் உயர்த்தப்பட்ட இடைவழியை புதுப்பித்தோம். மேலும் காமராஜர் மற்றும் சென்னை துறைமுகங்களை ஒருங்கிணைத்ததன் வாயிலாக இந்தியாவின் முதல் மெகா துறைமுக தொகுப்பை நாம் உருவாக்கினோம். காமராஜர் துறைமுகத்தின் திறன் கிட்டத்தட்ட மூன்று மடங்கானது. கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் பெருமானம் உள்ள 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் புதிய பொருளாதார சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் உரிமைகள் பற்றி வாய் கிழிய பேசுகின்றார்களே.. இவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஒன்றுமே செய்யவில்லை” என்று பேசினார்.
Follow Us