இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ச்சியாக இந்தியாவில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய பிரதமர் என்ற இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது கடந்த 1966 ஜனவரி 24 முதல் மார்ச் 24, 1977 வரை மறைந்த இந்திரா காந்தி தொடர்ச்சியாக 4,077 நாட்கள் பிரதமராக பதவியில் இருந்தார். பிரதமர் மோடி இன்றுடன் (25-07-25) தொடர்ச்சியாக 4,078 நாட்கள் பிரதமராக பதவியில் இருந்து இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்துள்ளார். அதே போல், இந்தியாவில் தடையின்றி பதவி வகித்த இரண்டாவது பிரதமர் என்ற சாதனையையும் பிரதமர் மோடி படைத்துள்ளார்.
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, பிரதமர் மோடி தொடர்ச்சியாக இரண்டாவது நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெறுகிறார். அதோடு அவர் பல வரலாற்றுச் சிறப்புகளையும் பெற்றுள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிறந்த முதல் மற்றும் ஒரே பிரதமர், காங்கிரஸ் அல்லாத பிரதமர், இந்தி பேசாத மாநிலத்திலிருந்து அதிக நாட்கள் பதவி வகித்த பிரதமர் ஆகிய பெருமைகளையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார். இரண்டு முழு பதவிக்காலங்களை நிறைவு செய்து இரண்டு முறை பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே காங்கிரஸ் அல்லாத பிரதமர் இவர் தான். இதன் மூலம் மக்களவையில் தனிப் பெரும்பான்மையைப் பெற்ற ஒரே காங்கிரஸ் அல்லாத பிரதமரும் இவரே.
1971 ஆம் ஆண்டு இந்திரா காந்திக்குப் பிறகு, முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல் பிரதமர் இவர்தான். மறைந்த ஜவஹர்லால் நேருவைத் தவிர, இந்தியாவில் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்ற ஒரே பிரதமர் மோடி ஆவார். 2002, 2007, 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தல்கள், 2014, 2019, 2024 மக்களவைத் தேர்தல்கள் என ஒரு கட்சியின் தலைவராக தொடர்ச்சியாக ஆறு தேர்தல்களில் வெற்றி பெற்ற முதல் பிரதமரும், முதலமைச்சரும் இவர் தான்.