செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டத் தொடக்க விழா இன்று (23-01-26) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க இன்று (23-01-26) மதியம் 2:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வந்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தா.மோ. அமைச்சர் அன்பரசன், தலைமைச் செயலாளர், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மற்றும் பா.ஜ.க, அதிமுக தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதனை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகம் பகுதிக்குச் சென்றார்.
மதுராந்தகம் பகுதிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அ.தி.மு.க பா.ஜ.க தலைவர்கள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து, மதுராந்தகத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சாலை மார்க்கமாக பிரதமர் மோடி சென்றார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களான அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக நிறுவனர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
Follow Us