Prime Minister Modi apologized to farmers in covai
கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (19-11-25) கோவை வந்தார். அதன் பின்னர், கொடிசியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இயற்கை வேளாண் கூட்டமைப்பு கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடிக்கும் அதிகமான தொகையை, பி.எம். கிஷான் (PM-KISAN) திட்டத்தின் 21வது தவணையைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த நிகழ்வின் மேடையில் ஏறிய பிரதமர் நரேந்திர மோடி, ‘வணக்கம்’ என்று தமிழில் உற்சாகமாக கூறி தனது உரையைத் தொடங்கினார். அதில் அவர் பேசியதாவது, “உங்களிடமும், நாட்டு மக்களிடமும் குறிப்பாக விவசாயிகளிடம் நான் மன்னிப்பைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். புட்டபர்த்தியில் காலதாமதம் ஆனதால், உங்களை தாமதிக்க வேண்டியிருந்தது. அதற்காக விவசாயிகளிடம் நான் மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். சிறு வயதில் தமிழை கற்றிருக்கலாம் என நினைத்திருக்கிறேன்.
நான் மேடையில் வந்த போது விவசாயிகள் தங்களுடைய மேல் துண்டை சுழற்றி கொண்டிருந்தார்கள். அப்போது, பீகாருடைய காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று எண்ணினேன். மருதமலையில் குடி கொண்டிருக்கும் அய்யன் முருகனை நான் முதன்மையாக தலை வணங்குகிறேன். கோயம்புத்தூர் தென் மாநிலங்களின் தொழில்துறையின் சக்திபீடமாக இருக்கிறது. கோவை நகரம், தொழிலில் சிறந்து விளங்குகிறது. வேறு ஒன்றுக்கும் தற்போது கோவை புகழ் பெற்றுள்ளது. அது என்னவென்றால், கோவை எம்.பியாக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராகியுள்ளார். கோவையில் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இங்கு வந்திருக்காவிட்டால் பல விஷயங்களை கற்றிருக்க மாட்டேன்” என்று கூறினார்.
Follow Us