கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இரவு நேரத்தில் காவல்துறை உயர் அதிகாரியை சாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்றதாக எலக்ட்ரிசியன் வேல்முருகன் மற்றும் சாமிநாதன் குருக்கள் ஆகியோர் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை(19.7.2025) இரவு காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். கோவில் நடை சாத்தப்பட்ட நிலையில், கோவில் எலக்ட்ரிசியன் வேல்முருகன் அவரை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய வைத்துள்ளார். அப்போது, சாமிநாதன் குருக்கள் அவருக்கு திருநீறு மற்றும் பிரசாதங்கள் வழங்கியுள்ளார்.
கோவில் நடை சாத்தப்பட்ட பிறகு காவல்துறை அதிகாரி பாண்டியராஜனை தரிசனத்திற்கு அழைத்துச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானதால் இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மருதமலை கோவில் துணை ஆணையரும், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தக்காருமான செந்தில்குமார் இவர்களிடம் விசாரணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரி பாண்டியராஜனை கோவிலுக்குள் அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்த எலக்ட்ரிசியன் வேல்முருகன் மற்றும் சாமிநாதன் குருக்கள் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் செல்போன்களை கோவில் நுழைவு வாயிலில் உள்ள அலுவலகத்தில் ஒப்படைத்து டோக்கன் பெற்றுக்கொண்டு செல்லலாம். தரிசனம் முடிந்த பிறகு, டோக்கனை ஒப்படைத்து செல்போன்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.