நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் தேதி (01.12.2025) தொடங்கி 19ஆம் தேதி (19.12.2025) வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலின் 150ஆம் ஆண்டு சிறப்பு விவாதம், எஸ்.ஐ.ஆர், உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. இதற்கிடையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி விபி-ஜி ராம் ஜி உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் புகையிலை பொருட்களுக்குக் கூடுதல் கலால் வரி விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன் எதிரொலியாக சிகரெட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியிருந்தது. அதாவது இந்த சட்டத்திருத்த அமலுக்கு வரும்போது சிகரெட் மீதான விலை உயர்வும் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் சிகரெட் விலை 3 மடங்கு உயர்வதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது புதிய மசோதாவின் படி மெல்லும் புகையிலைக்கான வரி 3 மடங்கு உயர உள்ளது. ஹூக்கா புகையிலைக்கான வரி 25%த்தில் இருந்து 40% ஆக உயர வாய்ப்புள்ளது. பலவகை கலந்த சிகரெட் புகையிலைக்கான வரி 60%த்தில் இருந்து 300% ஆக உயர உள்ளது. 5 மடங்கு வரை வரி உயர்வதால் சிகரெட், புகையிலை பொருட்களுக்கான விலையும் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது.
புதிய மசோதாவின் படி 1000 ஆயிரம் சிகரெட்களுக்கு ரூ. 200 முதல் ரூ. 735 வரையில் இருந்த வரியானது ரூ. 2 ஆயிரத்து 700இல் இருந்து ரூ. 11 ஆயிரமாக உயர உள்ளது. அந்த வகையில் தற்போது ரூ. 18க்கு விற்கும் சிகரெட் ஒன்றின் விலை ரூ. 72 ஆக உயர வாய்ப்புள்ளது. அதோடு சிகரெட்டுகளின் நீளம் மற்றும் அதன் வகைக்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும் எனத் தகவல் வெளியாகியிருந்தது. மெல்லும் புகையிலை பொருட்களுக்கான விலையும் கணிசமாக உயரும் எனக் கூறப்படுகிறது. சிகரெட்டின் விலையை உயர்த்தும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் பொதுமக்களிடையே புகை பிடிக்கும் பழக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/01/no-smoking-2026-01-01-19-29-39.jpg)
இந்நிலையில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு காரணமாக அவற்றின் விலை வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி (01.02.2026) முதல் உயர உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு கூடுதல் கலால் வரி விதிப்பும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால் ரூ. 18 மதிப்புள்ள சிகரெட் ஒன்றின் விலை ரூ. 72 ஆக உயர உள்ளது. மேலும் பான் மசாலா பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வரும் ஆரோக்கியம் மற்றும் தேச பாதுகாப்புக்கான கூடுதல் வரி விதிப்பும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. உடலுக்கும், சுற்றுச்சூழலும், சமூகத்திற்கும் தீங்கிழைக்கும் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தில் அவற்றுக்கு மத்திய அரசு கூடுதல் வரிகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/01/central-vista-no-smoking-2026-01-01-19-29-10.jpg)