ரஷ்யாவுடன் இந்தியா கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்துள்ளதாகவும், இந்தியா மிக அதிகமான வரி விதிப்பதாகவும் கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். அமெரிக்காவில் இருந்து பால், நெய், கோதுமை, சோயாபீன்ஸ், ஆப்பிள், திராட்சை, சோளம் உள்ளிட்ட வகைகளை இந்தியாவில் விற்பனை செய்ய அந்த நாடு அனுமதி கோரியதாகவும், இவை அனைத்தும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தாணியங்கள் அதனால் இந்தியாவின் விவசாயிகள் நலன் பாதிக்கப்படும் என்று இந்தியா கூறி அதற்கு மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா பொருட்களுக்கு 50% வரி விதிப்பு அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  

Advertisment

அதே சமயம், ரஷ்யாவிடம் இருந்து கச்சா இறக்குமதி வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையால், நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.இதனிடையே, இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றது.

Advertisment

இந்த நிலையில், அனைத்து வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது, “ஒரு குழந்தையிடம் இருந்து மிட்டாய் திருடுவது போல, மற்ற நாடுகளால் நமது திரைப்படத் தயாரிப்புத் தொழில் அமெரிக்காவில் இருந்து திருடப்படுகிறது. பலவீனமான மற்றும் திறமையற்ற ஆளுநரைக் கண்ட கலிபோர்னியா, குறிப்பாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நீண்ட கால ஒருபோதும் முடிவடையாத பிரச்சினையைத் தீர்க்க அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் எந்தவொரு மற்றும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% வரி விதிக்கப் போகிறேன். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி. அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இத்தகைய அதிக கட்டணங்கள் குறித்த யோசனையை கடந்த மே மாதத்தில் முதன்முதலில் டிரம்ப் முன்வைத்தார். ஆனால் அந்த நேரத்தில் குறிப்பிட்ட விவரங்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நெட்ஃபிளிக்ஸ், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி போன்ற பொழுதுபோக்கு தளங்கள் சரிவடைந்ததாகக் கூறப்படுகிறது. 

Advertisment