“அடுத்த 24 மணி நேரத்திற்குள்...” - இந்தியாவுக்கு அதிபர் டிரம்ப் மீண்டும் பகிரங்க எச்சரிக்கை!

trum

President Trump again issues public warning next 24 hours hike tariff to India

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்காவில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 25% வரி விதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்திருந்தார். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ததாலும், மிக அதிகமாக வரி விதிக்கப்படுவதாகவும் கூறி இந்தியாவுக்கு 25% வரி விதிப்பை அறிவித்தார். டொனால்ட் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இதனிடையே, இந்தியாவை டிரம்ப் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இந்தியா பொருளாதாரம் இறந்து போய்விட்டதாகவும், உலகிலேயே அதிக வரியை இந்தியா விதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். இந்தியா குறித்து டிரம்ப் விமர்சித்தது குறித்து பிரதமர் மோடி உட்பட எந்த ஒன்றிய அமைச்சரும் பதிலளிக்காமல் மறுத்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை வாங்கி அதனை சந்தையில் விற்கும் போது இந்தியா அதிக அளவிலான வருவாய் ஈட்டுவதாகவும், ரஷ்யாவில் இருந்து அதிக அளவிலான எண்ணெய்யை வாங்குவதாக இந்தியாவின் மீதான வரி மேலும் அதிகரிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று (04-08-25) அதிரடியாக அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த மத்திய அரசு,  இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது என்றும் இந்தியாவும் அதன் தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் கூறியிருந்தது.

இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் கூடுதல் வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “இந்தியா ஒரு நல்ல வர்த்தக கூட்டாளியாக இல்லை. ஏனென்றால் அவர்கள் எங்களுடன் நிறைய வணிகம் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்வதில்லை. எனவே, நாங்கள் 25 சதவீதத்தில் முடிவு செய்தோம். ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் நான் அதை கணிசமாக உயர்த்தப் போகிறேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் ரஷ்ய எண்ணெய்யை வாங்குகிறார்கள். அவர்கள் போர் இயந்திரத்தை எரியூட்டுகிறார்கள்” என்று கூறினார். 

America donald trump tariff
இதையும் படியுங்கள்
Subscribe