குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு சென்னை, திருச்சி, ஸ்ரீரங்கம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

குடியரசுத் தலைவர் இன்று காலை 10:30 மணியளவில் கர்நாடகாவின் மைசூரிலிருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் புறப்பட்டு, 11:40 மணியளவில் சென்னை வந்தடைகிறார். பின்னர், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்துகொள்கிறார்.

நாளை காலை சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்குச் செல்லும் குடியரசுத் தலைவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்குத் திரும்பி, ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து, திருச்சியிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.