இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் நாடு முழுவதும் இன்று (26.11.2025) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. இதில் குடியரசுத் துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ், நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராஜ்யசபா அவைத் தலைவர் ஜே.பி. நட்டா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக அரசியலமைப்பின் முகவுரையை வாசித்தனர். அதனைத் தொடர்ந்து மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா மற்றும் அசாமி உள்ளிட்ட 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டார். இதனையடுத்து அவர் உரையாற்றுகையில், “வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியலமைப்பு தினத்தில் உங்கள் அனைவருடனும் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதே நாளில், நவம்பர் 26, 1949 அன்று, அரசியலமைப்புச் சபையின் மைய மண்டபத்தில், அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணியை நிறைவு செய்தனர்.
அந்த வருடம் இதே நாளில்தான், இந்திய மக்களாகிய நாங்கள் எங்கள் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டோம். சுதந்திரத்திற்குப் பிறகு, அரசியலமைப்பு சபை இந்தியாவின் இடைக்கால நாடாளுமன்றமாகவும் செயல்பட்டது. பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர், வரைவுக் குழுவின் தலைவர், நமது அரசியலமைப்பின் முக்கிய சிற்பிகளில் ஒருவர் ஆவார். முத்தலாக் தொடர்பான சமூகத் தீமையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் அதிகாரமளிப்பு மற்றும் சமூக நீதியை நோக்கி நாடாளுமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு மிகப்பெரிய வரி சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி, நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்டது. நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் ஒருங்கிணைப்புக்குத் தடையாக இருந்த ஒரு தடையை 370வது பிரிவு நீக்கியது நீக்கியது. நாரி சக்தி வந்தன் சட்டம் (மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023) பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும். இந்த ஆண்டு, நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி, நமது தேசிய பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நாடு தழுவிய நினைவஞ்சலி கொண்டாடப்படுகிறது” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/26/murmu-speecch-constitution-2025-11-26-14-43-00.jpg)