மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்க் அருகே 9வது சர்வதேச சாந்தலி மாநாடு நேற்று  (07.03.2026) நடைபெற்றது. முதலில் சிலிகுரி அருகே உள்ள பிதான்நகர் மைதானத்தில் நடைபெறவிருந்த இந்த மாநாடு, கடைசி நேரத்தில் மாநில நிர்வாகத்தால் சிறிய இடமான கோசைன்பூருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்றிருந்தார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ஒரு மாநிலத்திற்கு வரும்போது, அந்த மாநில முதலமைச்சரோ, அமைச்சர்களோ அவரை வரவேற்க வருவது மரபு. ஆனால், முதலமைச்சர் மம்தா பானர்ஜியோ, அவரது அமைச்சர்களோ வரவில்லை.

Advertisment

முதலில் ஒரு பெரிய மைதானத்தில் நடைபெற வேண்டிய மாநாடு, கடைசி நேரத்தில் பாதுகாப்பு மற்றும் இடநெருக்கடியைக் காரணம் காட்டி மிகவும் சிறிய மற்றும் தொலைதூர இடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் பழங்குடியின மக்கள் பலரால் இந்த மாநாட்டிற்கு வர முடியாமல் போனது. யாரோ ஒருவர் பழங்குடியின மக்கள் முன்னேறுவதை விரும்பவில்லை. முதலமைச்சர் மம்தா பானர்ஜி என் தங்கை போன்றவர், நான் வங்காளத்தின் மகள். அவர் ஏன் என் மீது கோபமாக இருக்கிறார் என்று தெரியவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Advertisment

அதோடு, “இது திரௌபதி முர்மு என்ற தனிநபருக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்தப் பழங்குடியின சமுதாயத்திற்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் இழைக்கப்பட்ட அவமானம்” எனக் கூறி பாஜகவினர் நாடு முழுவதும் போராட்டங்களை அறிவித்துள்ளனர். அதே சமயம் மேற்கு வங்க அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “இது ஒரு தனியார் அமைப்பால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிஆகும். சட்ட்மன்ற தேர்தலுக்கான பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் முதலமைச்சரால் அங்கு வர முடியவில்லை” எனத் தெரிவிக்கப்படுள்ளது. 

mamta

மற்றொருபுறம் குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் பழங்குடியின அமைப்புகள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “நமது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மாநில அரசு முறையாக நடத்தவில்லை” எனக் குற்றம் சாட்டினர். மேலும் இந்த சம்ப்வம் தொடர்பாக ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு  விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைபாடுகள் மற்றும் மரபு ( புரோட்டோகால் - Protocol) மீறல்கள் பற்றி குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் வரும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சனை ஒரு பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது. பழங்குடியின மக்களின் வாக்குகளைப் பெறுவதில் இது ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Advertisment