மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு முதல், நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், ஒரு நபர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை செய்யும் நடைமுறை இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் தொழிலாளர்களாக உள்ளனர். இந்த சூழ்நிலையில், மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை மாற்றம் செய்து ‘விக்ஸித் பாரத் - ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) (VB - G RAM G) மசோதா - 2025 ’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டது. 

Advertisment

இந்த திட்டத்தில், 90% நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கி வந்த நிலையில் இனி 60% மட்டுமே வழங்கும் எனவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதோடு மீதம் உள்ள 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்யப்படவுள்ளது. மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை மாற்றியமைத்து இந்தி மொழியில் பெயர் வைக்கப்படுவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இத்தகைய சூழலில் தான் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.

Advertisment

அதோடு இந்த மசோதாவுக்கு எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்தனர். நள்ளிரவு வரை இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விக்ஸித் பாரத் ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) மசோதா, 2025க்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் சட்டம் கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு நிதியாண்டில் 125 நாட்களுக்கு சட்டப்பூர்வ ஊதிய வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை மேம்படுத்துகிறது. மேலும், அதிகாரமளித்தல், உள்ளடக்கிய வளர்ச்சி, மேம்பாட்டு முயற்சிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் செறிவூட்டல் அடிப்படையிலான விநியோகத்தை மேம்படுத்த முயல்கிறது. இதன் மூலம் வளமான, மீள்தன்மை மற்றும் தன்னம்பிக்கை கொண்ட கிராமப்புற பாரதத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்துகிறது என மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.