விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி, மக்களை தேடி’ என்ற மக்கள் பிரச்சார ரதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயபிரபாகரன், சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் ரதயாத்திரை வாகனத்தின் மேல் நின்றபடி தொண்டர்களைச் சந்தித்து உரையாற்றினர்.

Advertisment

ரத வாகனம் வந்தவுடன், கட்சித் துண்டை தோளில் சுற்றியபடி நின்ற பிரேமலதா, கலைக்குழுவினரிடம் ‘உன்னை தினம் தேடும் கலைஞன்’ பாடலை பாடச் சொல்லி ரசித்தார். பாடல் முழங்க, தொண்டர்கள் கைதட்டியபடி வரவேற்றதால் அங்கிருந்த சூழல் உற்சாகமாக மாறியது. தொண்டர்கள் மத்தியில் பேசத் தொடங்கிய விஜயபிரபாகரன், “2024 இல்லன்னாலும் 2026 இருக்கே, விருதுநகர் மாவட்டத்தில் எல்லா தொகுதியிலும் நான் நிற்கணும்னு மக்கள் ஆதரவு தொடர்ந்து வருது. இதுகுறித்து சீக்கிரமே ஒரு நல்ல முடிவு வரும்,” என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.  

Advertisment

அதனைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “கடந்த மக்களவைத் தேர்தலில் விஜயபிரபாகரனுக்கு ஆதரவு கொடுத்த எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. உண்மையிலே விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றது விஜயபிரபாகரன் தான், ஆனால் வேற ஒருவர் வென்றதாக அறிவிச்சாங்க. நம்ம கேப்டன் ஒரு வாழும் வள்ளல், எங்களுக்கு தெய்வம் மாதிரி. அவருக்குக் கொடுத்த அன்புப் பரிசுதான் இந்த ரதயாத்திரை. சமீபத்தில் நடந்த தேமுதிக மாநாடு, வெற்றி மாநாடு. யாரும் எதிர்பார்ப்பு இல்லாமல், கேப்டன் மீதான பாசத்தால்தான் வந்தாங்க. ஆனால் சில கட்சிகள் புடவை, சோறு, மோர், பீர் கொடுத்து கூட்டம் கூட்டுறாங்க.  எங்க போனாலும் ‘யாருடன் கூட்டணி?’ன்னு தான் கேட்கிறாங்க. இவ்வளவு நாள்,நான் உங்களுக்கு அண்ணி… இனிமேல் அம்மா!

தேமுதிக வெற்றி பெற்றால் சாத்தூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு விவசாயத்துக்கும் குடிநீருக்கும் சரியான ஆதாரம் ஏற்படுத்துவோம். வைப்பாற்றில் கழிவுநீர் கலப்பதை நிறுத்தி சுத்தமான குடிநீர் சேமிக்க நடவடிக்கை எடுப்போம். வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை பகுதிகளில் பட்டாசு தொழிலை பாதுகாப்போம். பேருந்து நிலையத்துக்கும் பள்ளிக்கூடத்துக்கும் அருகிலுள்ள அரசு மதுபான கடைகளை அகற்ற கோரிக்கை வைப்போம். உள்ளூர் வாகனங்களிடமிருந்து எட்டூர்வட்டம் சுங்கச்சாவடியில் பணம் வசூல் செய்வது சரியல்ல, அதையும் நிறுத்த நடவடிக்கை எடுக்க சொல்லுவோம், சென்னைக்கு போனதும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, தலைமைக் கழகத்திலிருந்து அதிகாரப்பூர்வமான நல்ல முடிவு அறிவிக்கப்படும். அதற்குப் பிறகுதான் தேர்தல் பணிகள் முழுவீச்சில் தொடங்கும். இன்னும் ஒரு மாதம் இருக்கிறது, நல்ல செய்தி சொல்ல வருகிறோம்” என்று உரையை நிறைவு  செய்தார்.  

Advertisment