Premalatha Vijayakanth says We will not form an alliance just for a Rajya Sabha seat
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
அதன்படி, கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக மற்றும் பா.ம.க , கூட்டணியில் இருந்து விலகி வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்க இருப்பதாக ஏற்கனவே பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து வருகிறார். முன்னதாக அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தபோது ஒரு மாநிலங்களவை எம்பி இடம் தேமுதிகவுக்கு ஒதுக்கி இருப்பதாக தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இறுதியில் அதிமுக தலைமை அதை மறுக்க, அதிருப்தியில் இருந்த பிரேமலதா அதன் காரணமாகவே கூட்டணி முடிவுகளை தள்ளி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெறும் ராஜ்ய சபா சீட்டுக்காக கூட்டணி அமைக்க மாட்டோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்திடம், 2026இல் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டு தருவதாக அதிமுக கூறியிருக்கிறது. அப்படி தரும் பட்சத்தில் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பிரேமலதா, “அதை இன்னைக்கு சொல்ல முடியாது. ஏனென்றால், ஏற்கெனவே அந்த கூட்டணியில் இருந்தோம். அப்போது ஒரு ராஜ்ய சபா சீட்டு தருவதாக எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டார்கள். அந்த சீட்டு 2025இல் வரும் என்று நினைத்தோம், ஆனால் 2026இல் தருவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். வெறும் ராஜ்ய சபா சீட்டுக்காக மட்டுமே கூட்டணி அமைப்பது தேமுதிகவின் எண்ணம் இல்லை. தொண்டர்கள் விரும்பும் கூட்டணி, தமிழக மக்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்பதை உறுதியாக சொல்கிறேன்” என்று கூறினார்.
Follow Us