Premalatha Vijayakanth on the alliance
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளனர். அதே போல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, த.மா.க, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களை போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதே போல் விஜய்யின் தவெக, பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இது தவிர தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆகிய கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், விரைவில் நல்ல கூட்டணி அமைக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. பிப்ரவரி 20க்குப் பிறகு தான் தேர்தல் தேதியை அறிவிக்கப் போகிறார்கள். தேமுதிக எங்கள் குழந்தை. ஒரு அம்மாவாக அதற்கு எப்போது நல்லது செய்ய வேண்டும் எனக்கு கடமையும் பொறுப்பும் அதிகமாக இருக்கிறது. அதனால் உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய ஒரு நல்ல கூட்டணியை நிச்சயமாக அமைப்போம்” என்று கூறினார்.
இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இன்னும் எதுவும் முடிவாகவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்த கட்சிகள் தான் இடம்பெற்றுள்ளது என்று அவர்களும் அறிவிக்கவில்லை. இன்னும் பல கட்சிகள் அங்கு சேர்ப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர்கள் சொல்கிறார்கள். எதுவுமே முடிவாகவில்லை. அதனால், எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டுமானாலும் எந்த கூட்டணி வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் தேமுதிகவை பொறுத்தவரைக்கும் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கின்ற வகையில் ஒரு தெளிவான சிந்தனையோடு நல்ல முடிவை எடுப்போம்” என்று கூறினார்.
Follow Us