தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
குறிப்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘உள்ளம் தேடி; இல்லம் நாடி’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்க இருப்பதாக ஏற்கனவே பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (13-11-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாவட்டச் செயலாளர்கள் சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “வட இந்தியர்கள் இங்கே வேலைக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால், அவர்களுக்கு வாக்குரிமையை கொடுப்பதை நிச்சயமாக தேமுதிக ஏற்காது. அதே போல், வாக்குத் திருட்டு நடப்பதாக எதிர்க்கட்சிகள் கூறிகொண்டே வருகிறார்கள். இது இன்றைக்கு மட்டுமா நடக்கிறது?
சுதந்திரம் வாங்கி எத்தனையோ தேர்தலை நாம் பார்த்துவிட்டோம். உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல், சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் என்னென்ன அராஜகம், முறைகேடுகள் நடக்கிறது என்பதை நாங்கள் கட்சி ஆரம்பித்த 20 வருடமாக பார்த்து வருகிறோம். எனவே, இது பல ஆண்டுகளாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். இன்றைக்கு ஆளுங்கட்சியாக இருக்கிறவர்கள் அது இல்லை என மறுப்பதும், எதிர்கட்சியாக இருப்பவர்கள் இந்த மாதிரி தவறு நடக்கிறது என்று சொல்வதும் நாம் பல்வேறு வருஷமா பார்த்துட்டு இருக்கோம். ஆனால், ஜனநாயக ரீதியாக ஒரு நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும் என்பது தான் தேமுதிகவின் நிலைப்பாடு” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து, கூட்டணி குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எங்களுடைய மாநாடு நடைபெறுவதற்கு 20 நாள்கள் இருக்கும் போது எங்களுடைய மாவட்டச் செயலாளரையும் அழைத்து ஒவ்வொருவருடைய கருத்துக்களையும் கேட்போம். அனைவரிடமும் கலந்து ஆலோசித்து தேமுதிகவின் நிலைப்பாடு என்ன? யாருடன் கூட்டணி அமைக்கிறது?. ஒட்டுமொத்தமாக தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விரும்புகிறார்களோ அந்த கூட்டணி நிச்சயம் அமைப்போம். அனைத்து கட்சியின் நிலைப்பாடு என்பது என்ன என்று இன்றைக்கு கணிக்கவே முடியாது. அதனால் கூட்டணியை அவசரப்பட்டு எடுக்க வேண்டிய முடிவோ, ரகசியமாக எடுக்க வேண்டிய முடிவோ இல்லை. மிகத் தெளிவாக, மிக மிக அறிவுப்பூர்வமாக வருகின்ற தேர்தலில் தேமுதிக எடுக்கும் நிலைப்பாடு நிச்சயம் மகத்தான வெற்றி கூட்டணியாக மட்டும் இருக்கும் என்பதை இன்றைக்கு நான் உறுதியாக சொல்றேன். தேமுதிக, அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அது மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்கின்ற ஒரு கூட்டணியாக இருக்கும் என்பதை உறுதியா சொல்கிறேன்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/13/prem-2025-11-13-17-50-04.jpg)