தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.

Advertisment

அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் ஏற்கனவே தொகுதி வாரியாக தேதிகளை திட்டமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில், 'தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என்ற தலைப்பில் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

இந்நிலையில் அந்த வரிசையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற தலைப்பில் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கி இருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள முக்தி விநாயகர் கோவிலில் பூஜையில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இன்று முதல் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை முதற்கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இன்று நாளை பொதுக்கூட்டத்திலும் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்ள உள்ளார்.