கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisment

தலைமறைவாக இருக்கும் என்.ஆனந்த் மற்றும் சி.டி.ஆர் நிர்மல்குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், இருவரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி ஜோதிமணி, தவெக பொதுச் செயலாளார் என்.ஆனந்த், மற்றும் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து, என். ஆனந்த்,  நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருவதாகத் தகவல் வெளியாகி வருகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசியலில் நடக்கும் விவகாரம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், கரூர் சம்பவத்திற்கு தமிழக அரசும், விஜய்யும் பொறுப்பேற்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், “மக்கள், யாருக்காக வந்தார்கள்?. உங்களை பார்க்க தான் வந்தார்கள். அப்படியென்றால் யார் பொறுப்பு? நிச்சயமாக பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களையும் விஜய் நேரில் சென்று சந்திக்க வேண்டும். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி நீங்கள் அறிவித்த நிவாரணத் தொகையை நேரில் கொடுக்க வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 41 உயிருக்கும் தமிழக அரசும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியும் பொறுப்பேற்க வேண்டும்.

விஜய்யை கைது செய்ய வேண்டும், என்.ஆனந்த்தை கைது செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இதில் என்.ஆனந்த் தலைமறைவாக இருக்கிறார் என்று சொல்கிறார்கள். தலைக்கு கத்தியா வர போகிறது?. தூக்கிலா போட போகிறார்கள்?. ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும், வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டால் தேமுதிக எப்படி முதல் ஆளாக நிற்குமோ அது மாதிரி ஒரு கட்சித் தலைவர் நிற்க வேண்டும்” என்று ஆவேசமாகப் பேசினார். 

Advertisment