கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் நேற்று (03.10.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் பேரணி செல்ல அனுமதி வழங்கப்படாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
மற்றொருபுறம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ‘இல்லம் தேடி உள்ளம் நாடி’ என்ற பெயரில் சுற்றுப் பயணத்தைத் தொடங்கியிருந்தார். அதன்படி கிருஷணகிரியில் அவர் ரோடு ஷோ மற்றும் வேன் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். இந்நிலையில் பிரேமலதாவின் ரோடு ஷோ மற்றும் வேன் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் கிருஷ்ணகிரியில் பிரேமலதா மேடை அமைத்து பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறையினர் அனுமதி வழங்கியிருந்தனர்.