2026 சட்டமன்றத் தேர்தலை குறி வைத்து எடப்பாடி, பிரேமலதா, விஜய் என தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களைத் தேடி வரத் தொடங்கியுள்ளனர். மீதமுள்ள அரசியல் கட்சித்தலைவர்களும் அடுத்தடுத்து கிளம்பத் தயாராகி வருகின்றனர். இந்த வகையில் தான் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது மகன் விஜய பிரபாகரன், தம்பி சுதீஷ் ஆகியோருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று (11.09.2025 - வியாழக்கிழமை), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் இலங்கைத் தமிழர்கள் கொத்த ரத யாத்திரையில் வந்து மக்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசும் போது, “விஜயகாந்த் எதற்காக கட்சி தொடங்கினார் ஊழலை ஒழிக்க வேண்டும், அனைவருக்கும் கல்வி, மருத்துவம், உணவு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பபதற்காகத் தான். ஆனால் இதுவரை மக்களுக்கு கிடைக்கவில்லை. ஊழல் தான் பெருகிவிட்டது. நான் ஆட்சிக்கு வந்தால் வீடு தேடி ரேசன் பொருள் வரும் என்றார். அதைக் கேட்டு கிண்டல் செய்தார்கள். இப்ப வருது. விஜயகாந்த் இருக்கும் போது கிண்டல் செய்தவர்கள் அவர் மறைந்த பிறகு அவர் நல்லவர் என்று இப்போது பாராட்டுகிறார்கள். இப்போது நான் மக்களைத் தேடி வந்திருக்கிறேன். நான் வரும் வழியெங்கும் மின்சாரத்தை நிறுத்துகிறார்கள். அதனால் தான் எங்கள் வாகனத்திலேயே மைக், ஸ்பிக்கர், லைட் எல்லாம் கொண்டு வந்து விடுகிறோம்.
இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். ஆனால் கனிமங்கள் கொள்ளை தான் போகிறது. அதை கண்டுக்கவில்லை. முன்பு கே.சி.பி என்று ஒருவர் இருந்தால் அவரை நாங்கள் ஜெ.சி.பி என்று தான் சொல்வோம். இன்று அவர் இருந்த இடம் தெரியவில்லை. அது போல தான் இப்ப இங்கே உள்ள அமைச்சரும். அவருக்கு செங்கலபட்டில் கல்லூரி எல்லாம் நடக்கிறது. மகளிருக்கு இலவச பஸ் கேட்கல, உரிமைத் தொகை கேட்கல ஆனால் கொடுத்தீங்க. உரிமைத் தொகை எல்லாருக்கும் கிடைக்குதா? இல்லை. எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு உரிமைத் தொகைக்காக தனி அலுவலகம் அமைக்க வேண்டும் என்று மகளிர் சார்பாக கேட்டுக்கிறேன்.
ஒரு முறை எங்களை ஆட்சியில் அமர வைத்துப் பாருங்கள். அதன் பிறகு 50 கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் தேமுதிகவை அசைக்க கூட முடியாது. மக்களும் மாற வேண்டும். ஓட்டுக் கேட்டு வரும் போது பணம், பீரு, சோறுக்காக வாக்களிக்காதீங்க. நீங்கள் மாற வேண்டும்” என்றார். மேலும், “நான் போகும் இடங்களில் எல்லாம் நீண்ட கோரிக்கை மனுக்களை எழுதிக் கொடுக்கிறார்கள். அப்படியென்றால் மக்களுக்கு அத்தனை தேவைகள் உள்ளது. ஜனவரி 9 கடலூர் மாநாட்டில் அனைவரும் சந்திப்போம்” என்றார்.