நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று (28.12.2025) அனுசரிக்கப்பட்டது. இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு  குருபூஜை நடைபெற்றது. அதோடு கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அலுவலகம் அருகே இருந்து விஜயகாந்தின் நினைவிடம் வரை பேரணி நடைபெற்றது. 

Advertisment

மேலும், இன்று காலை முதல் அவரது நினைவிடத்தில் ஏராளமான அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ரசிகர் தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தினர். அதே சமயம்  தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை முதல் மௌன விரதம் இருந்து வந்தார். இந்நிலையில் மௌன விரதத்தை முடித்த பிரேமலதா விஜயகாந்த்  சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்கள் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நான் ஏற்கனவே சொன்னது தான் ஜனவரி 9ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. அதன் பிறகு ஒரு தெளிவான ஒரு முடிவு எடுப்போம். 

Advertisment

பொங்கல் முடித்த உடனே நிச்சயமாக, தமிழ்நாடு முழுக்க தேமுதிக சார்பாக விருப்ப மனு வாங்க உள்ளோம். அதுமட்டுமில்லாமல் கன்னியாகுமரியில் இருந்து விருதுநகர் வரைக்கும் நான்காம் கட்ட சுற்றுப் பயணம் உள்ளது. அதையும் நாங்கள் முடிக்க உள்ளோம். அதற்குள் நிச்சயம் நல்ல கூட்டணி அமைத்து தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது நடக்கின்ற ஒரு நல்ல கூட்டணியை அமைப்போம். தேமுதிக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அந்த கூட்டணியை நிச்சயம் தேமுதிக இந்த முறை அமைக்கும். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். மகத்தான வெற்றி பெறும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் கூறிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.