தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று (21.08.2025) மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் நடைபெற்றது. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற மாநாட்டில் விஜய்யின் பேச்சு தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisment

மாநாட்டில் ‘உங்கள் விஜய்... நான் வரேன்...’ என்ற பாடலுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் எண்ட்ரி கொடுத்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிறகு கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையும் மாநாடு முறைப்படி தொடங்கியது. மேடையில் பேசிய விஜய் தொண்டர்களின் ஆராவாரத்துக்கிடையே உணர்ச்சிப் பொங்க பேசினார். அப்போது மறைந்த நடிகரும் தேமுதிக முன்னாள் தலைவருமான விஜயகாந்த் குறித்து பேசியிருந்தார்.

இந்த மாநாட்டில் பேசிய விஜய், “நான் இந்த மண்ணுல காலெடுத்து வச்சவுடனே ஒரே ஒருத்தர பத்தி தான் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு. அவர் யாருன்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி, நமக்கு ரொம்ப புடிச்சது எம்.ஜி.ஆர். தான். அவரோட பழகுறதுக்கு எனக்கு வாய்பு கிடைக்கல. ஆனா அவர மாதிரியே குணம் கொண்ட என்னுடைய அண்ணன், விஜயகாந்தோட பழகுறதுக்கு நிறையவே வாய்ப்பு கிடைச்சுது. அவரும் இந்த மதுரை மண்ணை சேர்ந்தவர் தானே அவரை மறக்க முடியுமா” என அவரை நினைவு கூர்ந்தார்.

விஜயகாந்தை புகழ்ந்து பேசியதற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தம்பி என்கிற எண்ணத்தில் தான் பேசியிருக்கிறார். அவர் எப்போது விஜயகாந்தை அண்ணன் என்று சொன்னாரோ அவர் தம்பி தான். அவர் எங்க வீட்டு பையன் தான் என நான் எப்போதுமே சொல்லிட்டு தான் இருக்கிறேன். அவர் அண்ணன் என்றார், எங்களுக்கு அவர் தம்பி. பல்வேறு படங்களில் விஜயகாந்தின் சின்ன வயது கதாபாத்திரத்தை விஜய் தான் செய்திருப்பார். எங்க வீட்டு பக்கத்தில் தான் அவருடைய வீடு. எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜயகாந்துக்குமான உறவு 17 திரைப்படங்களில் இருந்திருக்கிறது. இன்னைக்கு நேற்று இந்த உறவு இல்லை. பல வருடமாக விஜயகாந்த் சினிமா துறையில் காலடி வைத்ததில் இருந்து அந்த நட்பு அப்படியே தொடர்கிறது. விஜய்யின் படத்திற்கு கூட விஜயகாந்தின் ஏஐ பயன்படுத்தினார்கள், தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நாங்கள் சொன்னோம்” என்று கூறினார்.