தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, முதல் முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. கட்சி தொடங்கி இதுவரை திமுக கூட்டணியில் சேராத தேமுதிக, முதல் முறையாக அக்கூட்டணியில் சேர்ந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Advertisment

மேலும், கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, தற்போது அந்த கட்சிகளுடன் சேராமல் திமுகவில் கூட்டணி வைத்திருப்பது அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளதால், திமுக எதிர்ப்பில் இருந்த விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது என்று கூட பா.ஜ.கவினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வந்தனர்.

Advertisment

இந்த சூழ்நிலையில், மார்ச் 16ஆம் தேதி நடக்கவிருக்கும் காலி இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக கூட்டணியில் இருந்து 1 சீட்டை தேமுதிக பெற்றுள்ளது. அதன்படி தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்காக விஜயகாந்தின் மைத்துனரும் தேமுதிக பொருளாளருமான எல்.கே.சுதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் இன்று (05-03-26) என்பதால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

அதனை தொடர்ந்து பிரேமலதாவும் எல்.கே.சுதீஷும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பிரேமலதா பேசியதாவது, “அனைவரும் விரும்பிய கூட்டணி, போற்றும் கூட்டணி கொண்டாடும் ஒரு கூட்டணியை தான் இந்த முறை அமைத்திருக்கிறோம். திமுகவிலும் சரி கூட்டணியில் இருப்பவர்களும் சரி  தேமுதிகவை சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து ஒரு மகத்தான வெற்றியை இந்த தேர்தலில் 200க்கு மேல் நிச்சயம் பெற்று பெறுவோம். விஜயகாந்தின் ஆன்மா எது தெரியுமா? அவருடைய கடைகோடியில் இருக்கிற தொண்டர்கள் தான் விஜயகாந்தின் ஆன்மா. அதனால் தேமுதிகவுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் விஜயகாந்தின் ஆன்மாவை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

அதற்கு உரியவர்கள் நாங்களே அமைதியாக இருக்கிறோம். அதற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் யார் யாரோ விஜயகாந்தின் ஆன்மாவை பற்றி பேசிட்டு இருக்காங்க. இதை நகைப்புக்குரிய விஷயமாக தான் நான் பார்க்கிறேன். அவருடைய ஆன்மா எங்கே இருக்கிறது எங்களுக்குத் தெரியும். அவரை விரும்பிய அவருடைய கடைக்கோடி நிர்வாகி, தொண்டர் தான் அவருடைய ஆன்மா. எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.