பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்காக ரிப்பன் மாளிகை வளாகம் நேற்று (13.08.2025) மாலை முதலே போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகும் போராட்டத்தைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வந்த நிலையில் போலீசார் குண்டுகட்டாக தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தீவிரவாதிகளை கைது செய்வது போல நள்ளிரவில் தூய்மை பணியாளர்களைக் கைது செய்துள்ளது எந்த விதத்தில் நியாயம்?. 12 நாட்களாகச் சம்பள உயர்வுக்காகவும், நிரந்தர பணி வழங்கிடவும் போராடிய தூய்மை பணியாளர்களை இரவோடு இரவாகக் கைது செய்தது மிக மிக கண்டனத்திற்குரிய ஒரு விஷயம். உடனடியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், துறை சார்ந்த அமைச்சர்களும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும்.
இன்றைக்கு மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தங்கள் உரிமைக்காக போராடிய தூய்மை பணியாளர்களுக்கு இந்த அரசு நிச்சயம் அவர்கள் கோரிக்கைக்குச் செவி சாய்த்து உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். நள்ளிரவில் கைது செய்ததை தேமுதிக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.