வரதட்சணை தொடர்பாக பெண்களுக்கு எதிராக ஏற்படும் வன்கொடுமை சம்பவங்கள் கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த அதுல்யா என்ற 29 வயது திருமணமான பெண், ஜூலை 21ஆம் தேதியன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாகவும், தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் அதுல்யாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதுல்யா குடும்பத்தினரின் கூற்றுப்படி, அதுல்யா 2014இல் திருமணம் செய்து கொண்டதில் இருந்து அவரது கணவரால் வரதட்சணை கொடுமைகளை அனுபவித்தார் என்றும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதுல்யாவை அவரது கணவர் தாக்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுல்யாவின் உடலில் காயங்களைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்கள் ஆதாரமாக வெளியிட்டு பரபரப்பை கிளப்பினர். அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக கொல்லம் போலீசார், அதுல்யாவின் கணவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து மற்றொரு சம்பவமாக கடந்த ஜூலை 8ஆம் தேதி 32 வயதான விபாஞ்சிகா மணியனும் அவரது ஒன்றரை வயது மகளும் ஷார்ஜாவில் உள்ள அவர்களது அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து இறந்து கிடந்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக விபாஞ்சிகா எழுதியிருந்த கடிதத்தில், கணவரால் பல ஆண்டுகளாக வரதட்சணை துன்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றை எதிர்கொண்டதாகவும், உதவி செய்ய யாரும் வரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதத்தில், ‘கணவர் சில வீடியோக்களைப் பார்ப்பார், படுக்கையில் அவற்றைச் செய்யுமாறு நான் கோருவார். நான் ஒரு நாயைப் போல சித்திரவதை செய்யப்பட்டு அடிக்கப்பட்டேன். இனி என்னால் அதைத் தாங்க முடியாது. அவர்களை விட்டுவிடாதீர்கள்’ என்று அவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, கேரள காவல்துறை விபாஞ்சிகாவின் கணவர் நிதிஷ், அவரது சகோதரி மற்றும் அவரது தந்தை மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வரதட்சணை தொடர்பான குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் வரதட்சணை தொடர்பாக வன்கொடுமை அரங்கேறி வரும் நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் வெள்ளாங்குளரியைச் சேர்ந்தவர் ஃபசீலா என்ற 23 வயது பெண். திருமணமாகி ஒரு மகன் இருந்த நிலையில் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூலை 29ஆம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை அறிந்த கேரளா போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ஃபசீலாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஃபசீலா தனது தாய்க்கு வாட்ஸ் அப் மூலம் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஃபசீலா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும், அவரது கணவர் வயிற்றில் பல முறை உதைத்தாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த செய்தியில், ‘கணவர் எனது கையை உதைத்துள்ளார். எனது மாமியார் என்னை தொடர்ந்து வாய்மொழியாக திட்டினார். கணவரும் மாமியாரும் மீண்டும் மீண்டும் என்னை துன்புறுத்தினர். நான் இறக்கப் போகிறேன், இல்லையெனில் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்’ என வேதனையோடு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து ஃபசீலாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், ஃபசீலாவின் கணவர் மற்றும் மாமியார் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது