9 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கத்திகுத்தி விழுந்த நிலையில் கையில் குத்தப்பட்ட கத்தியுடன் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

வேலூர் மாவட்டம் சூரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய தங்கை கிருத்திகா 9 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இவர்களது வீட்டிற்கு அருகே உள்ள வீட்டில் வசித்து வருபவர் சதீஷ். சதீஷுக்கும் சக்திவேலுக்கு ஏற்கெனவே முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது. இதன் காரணமாக, 6 மாதங்களுக்கு முன்பு வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

Advertisment

இந்த நிலையில் வழக்கம் போல், நேற்று (07-12-25) இரவு இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் சண்டையாக மாறியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சதீஷ், கத்தியை எடுத்து வந்து சக்திவேலை வெட்டுவதற்காக முயற்சி செய்துள்ளார். அதனை கண்ட அருகில் இருந்த கிருத்திகா, உடனே குறுக்கே புகுந்து தடுத்துள்ளார். அப்போது அந்த கத்தி, கிருத்திகாவின் வலது கையில் குத்தப்பட்டுள்ளது. வலது கையில் குத்தப்பட்ட கத்தி, கையின் பின்புறம் வந்துள்ளதால் அந்த கத்தியை அப்படியே விட்டுவிட்டு சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனை அறிந்த பொதுமக்கள், உடனடியாக கிருத்திகாவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். கையில் குத்தப்பட்ட கத்தியோடு மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் கத்தி அகற்றப்பட்டு கிருத்திகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கையில் குத்திய சதீஷை வேலூர் தெற்கு காவல்நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisment