திருவண்ணாமலை அண்ணாமலையார் – உண்ணாமுலையம்மன் திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா இந்தாண்டு 2025 நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கவுள்ளது. தினமும் காலை – இரவு என இரண்டு முறை சுவாமி அலங்கார ஊர்வலம் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் செய்வார்கள்.
ஐந்தாம் நாள் திருவிழா முதல் லட்சங்களில் பக்தர்களின் எண்ணிக்கை உயரும். வெள்ளி ரிஷபம், நவம்பர் 29 ஆம் தேதி ஆறாம் நாள் திருவிழாவான வெள்ளித்தேர், நவம்பர் 30 ஆம் தேதி 7 ஆம் நாள் திருவிழாவான மகாரதம் நடைபெறுகிறது. டிசம்பர் 3 ஆம் தேதி 10வது நாள் காலை அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2666 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இதற்கு சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
16 நாள் நடைபெறும் தீபத்திருவிழா மற்றும் தீபம் மலையில் எரியும் 11 நாட்கள் என 27 நாட்கள் திருவண்ணாமலை திருவிழா கோலத்தில் இருக்கும். சுமார் 50 லட்சம் பக்தர்கள் இந்த தீபத்திருவிழாவிற்காக வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம், மாநகர நிர்வாகம் செய்யத்தொடங்கியுள்ளன. மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் தீபத்திருவிழா ஆலோசனை கூட்டம் அடிக்கடி நடந்துவருகிறது. ஒவ்வொரு துறையும் செய்துள்ள பணிகள் குறித்தும், செய்யவேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. தேர்கள் செப்பனிடும் பணிகள் நடந்துவருகின்றன.
திருவிழாவை முன்னிட்டு மாடவீதியில் உள்ள ஆக்ரமிப்புகள், கிரிவலப்பாதையில் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்படுகின்றன. அதேநேரத்தில் தேரோடும் மாடவீதியில் பல புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர காவல்துறை – மாநகராட்சி இணைந்து முடிவு செய்துள்ளன. அதன்படி, மாடவீதியில் சில சிதிலமடைந்த கட்டிடங்கள் உள்ளன. அதற்கு சீல் வைக்க மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதேபோல், மாடவீதியில் தேர்வீதியுலா வரும்போது கட்டிடங்கள் மீது பக்தர்கள், பொதுமக்கள் ஏற அனுமதிக்ககூடாது. மாடவீதியில் உள்ள வீட்டினர் மட்டும் மாடியில் இருந்து தேர் மற்றும் சுவாமி வீதியுலாவை காணவேண்டும் என விழிப்புணர்வும், எச்சரிக்கையும் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பரணி தீபம், மகாதீபத்தன்று கோவிலுக்குள் எவ்வளவு பக்தர்கள், விவிஐபிகள் அனுமதி, மலை உச்சியில் பக்தர்கள் ஏறவும், மலை உச்சியில் பக்தர்கள் நிற்காமல் உடனே கீழே இறங்க கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவரவும், நெருக்கடியான இடங்களில் பக்தர்களை குறைக்கவும் ஆலோசனை நடந்துவருகிறது.
ஆந்திராவில் கோவில் ஒன்றில் பக்தர்கள் நெரிசலால் 12 பேர் இறந்தனர். நடிகர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில் நெருக்கடியில் 41 பேர் இறந்தனர். இதனையெல்லாம் கவனத்தில் வைத்து அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் முடிவு செய்து உயரதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
Follow Us