Praveen Chakravarthy’s advice to newly appointed Tamil Nadu Congress district leaders
திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சில தினங்களாகவே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து கூறி வந்தனர். இதனால் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கான பலம் குறித்தும், கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்டவைகள் குறித்து வெளிப்படையாகவே கருத்துக்களை தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைமை தலைமையில் கடந்த 17ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்றும், கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் தேசிய தலைமை முடிவெடுக்கும் என்றும் காங்கிரஸ் தலைமை தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் கராராக கூறியதாகத் தகவல் வெளியானது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரவீன் சக்கரவர்த்தியும் கலந்து கொண்டார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாவட்டத் தலைவர்களை காங்கிரஸ் தலைமை நியமித்து உத்தரவிட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காக அமைப்பு ரீதியாக மொத்தமுள்ள 77 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கான புதிய மாவட்டத் தலைவர்களை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 71 மாவட்டத் தலைவர்களுக்கு பிரவீன் சக்கரவர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும் வாழ்த்துகள். மற்ற எந்தக் கட்சிக்கும் அடிபணியாமல், சுயமரியாதை மற்றும் தன்னாபிமானத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். காங்கிரஸின் உண்மையான அடிமட்ட பலத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமையாகும்” என அறிவுறுத்தியுள்ளார்.
Follow Us