தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக - காங்கிரஸ் கூட்டணி, மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பாகத் தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “திமுக - காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் நிச்சயம் இணக்கமாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பது மாதிரி இல்லை. ஊடகங்கள் அது போன்ற (திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இருப்பது போன்று) ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இரு கட்சியினரும் நன்றாக இருக்கிறோம். ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் (திமுகவுக்கும்) தெரியும். அவர்களுக்கும் (காங்கிரஸுக்கும்) தெரியும். இது இடையில் உள்ள சிலர் கிளப்பிவிடும் பிரச்சனை. 

Advertisment

கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா? என்று திட்டமிட்டு சதி செய்கின்றனர். அதனைப்பற்றி திமுகவும், காங்கிரஸும் கவலைப்படுவதில்லை” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தியிடம், இது தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது. இதற்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழ்நாடு காங்கிரஸில் உள்ள பெரும்பாலான தொண்டர்களும், பெரும்பான்மையான நிர்வாகிகள் மற்றும் தலைவர்களும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு கூட்டணிக் அரசாங்கத்தின் அங்கமாக இருக்க வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறார்கள். 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. எனவே ஒரு கூட்டணி ஆட்சியில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டதாக காங்கிரஸ் உணர்கிறது. 

Advertisment

ஒரு மாநிலத்தில் கூட்டணிக் அரசாங்கம் என்பது ஒன்றும் தனித்துவமான விஷயம் அல்ல. எனவே, தமிழ்நாடு மட்டும் இதில் ஏன் தனித்துவமாக அல்லது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் அதிகாரப் பகிர்வு குறித்த அறிக்கை பற்றி அவர் கூறுகையில், கூட்டணி அல்லது பேச்சுவார்த்தை குறித்து என்னால் எதையும் கருத்து கூற முடியாது. ஆம், இதுவரை தமிழகத்தில் மாநில அளவில் கூட்டணிக் ஆட்சி அமைந்ததில்லை என்பது உண்மைதான். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு முதல் முறை உண்டு. எனவே இதில் எந்தக் கடுமையான விதியோ அல்லது தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கு என்றோ எதுவும் இல்லை” என்றார்.