தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் காங்கிரஸில் மீண்டும் எழுந்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் ஐபிடிஎஸ் நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு ஒன்றை சுட்டிக்காட்டி பதிவு ஒன்றை வெளியிட்டார். அதனைச் சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர், “தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல, அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே. சீட்டுகளை பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமல்ல, அதிகாரப் பங்கீட்டிற்கும் இதுவே சரியான நேரம்” என்று தெரிவித்திருந்தார்.
மாணிக்கம் தாகூரின் இந்த கருத்துக்கு திமுகவில் இருந்து எதிர்ப்பு குரல் வரத் தொடங்கியுள்ளது. இதனால் திமுக கூட்டணியில் குழப்பமும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, காங்கிரஸ் வாக்கு சதவீதத்தை நீக்கிவிட்டால் திமுக கூட்டணியால் ஆட்சிக்கு வர முடியுமா? என காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பினார். இது திமுக கூட்டணியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விஜய் ஒரு அரசியல் சக்தியாக மாறியுள்ளார் என்று பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரவீன் சக்கரவர்த்தி, “கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கை. இது காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக, எதிர்காலத்திற்காக வைக்கப்படுகிற கோரிக்கை. 60 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சி பலவீனமாக சென்று கொண்டிருக்கிறது. இதை பலப்படுத்த நேரம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்காக இந்த கோரிக்கை வைக்கப்படுகிறது. கூட்டணியை பொறுத்தவரைக்கு காங்கிரஸ் தலைமை தான் முடிவு எடுக்கும். தொண்டர்கள் அவர்களுடைய கோரிக்கையை வைக்கலாம், ஆனால் இறுதி முடிவை தலைமையே எடுக்கும்.
தவெக தலைவர் விஜய்யை சந்தித்தேன் அவ்வளவு தான், அதற்கு மேல் எதையும் சொல்ல முடியாது, சொல்ல விரும்பவில்லை. இரண்டு பேர் சந்திக்கக் கூடாதா?. சந்திப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது. டெல்லியில் நிறைய பேரை சந்திக்கிறேன், யாரும் கேள்வி கேட்டது கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு கேள்வி கேட்கிறீர்கள்?. விஜய்யின் கூட்டத்துக்கு மக்கள் உற்சாகமாக வருகிறார்கள், அது வெளிப்படையாக தெரிகிறது. அவரை ஒரு நடிகராக மக்கள் பார்க்க வரவில்லை. ஒரு அரசியல்வாதியாக தான் பார்க்க வருகிறார்கள். அவர் ஒரு சக்தி தான் அதை யாராலும் மறுக்க முடியாது. அவர் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/vijaypraveen-2026-01-07-11-03-24.jpg)