Prashant Kishor announced he will contest in bihar assembly election
பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதனால் கடந்த சில மாதங்களாகவே பீகார் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மாநிலத்தில் தற்போது நிதீஷ் குமார் தலைமையிலான ஜனதா தள் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் தேர்தலில் இதே தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்கிறது. மறுபுறம், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என்று பீகார் தேர்தல் களத்தில் தற்போது மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்று வேட்பாளர் பட்டியலை கூட்டணி கட்சிகள் அறிவித்து வருகின்றன. எதிர்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் நடைபெற்று வரும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதால் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் புதிதாக களமிறங்கியுள்ள பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதால் பீகார் தேர்தல் மீதான எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. அதன்படி, தனது கட்சி வேட்பாளர் பட்டியலை ஜன் சுராஜ் தொடர்ந்து அறிவித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு 51 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பிரஷாந்த் கிஷோர் வெளியிட்டார். அதில் போஜ்புரி பாடகர் ரிதேஷ் பாண்டே, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே மிஸ்ரா உள்ளிட்ட பிரபலமானவர்கள் இடம்பெற்றிருந்தனர். அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் (13-10-25) 66 வேட்பாளர்கள் கொண்ட 2வது வேட்பாளர் பட்டியலை பிரஷாந்த் கிஷோர் வெளியிட்டார்.
ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரஷாந்த் கிஷோர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று குழப்பம் நீடித்து வந்த நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரஷாந்த் கிஷோர், “நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். இதை கட்சி முடிவு செய்துள்ளது. கட்சியில் நான் செய்து வரும் பணிகளைத் தொடர்ந்து செய்வேன். கட்சியின் நீடித்த நலனுக்காக நான் நிறுவனப் பணிகளைத் தொடர்ந்து செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வியூக கணிப்பாளர்களில் முதன்மையாக கருதப்படும் பிரஷாந்த் கிஷோர், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்து கொடுத்து அந்த கட்சிகளை வெற்றி பெறவும் செய்திருக்கிறார். தேர்தல் வியூகங்கள் பணியை கைவிட்ட இவர், அரசியல் தொடர்பான கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வந்தார். பீகார் மாநில அரசியலில் அதிக ஆர்வம் காட்டிய பிரஷாந்த் கிஷோர், ‘ஜன் சுராஜ்’ எனும் இயக்கத்தை தொடங்கி மாநிலம் முழுவதும் சுமார் 3,000 கி.மீ பாதயாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவை பெற்று வந்தார். 2 ஆண்டுகளாக தொடர்ந்து பாதயாத்திரை மேற்கொண்டு வந்த பிரஷாந்த், தனது இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். ‘ஜன் சுராஜ்’ எனும் கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கிய பிரஷாந்த் கிஷோர், தேர்தல் அரசியலிலும் போட்டியிடப்போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.