ஆந்திர மாநிலம் கோவூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பிரசன்ன குமார் ரெட்டி. இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவூர் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டார். ஆனால், ஆனால், இவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சியை(TDP) சேர்ந்த பெண் வேட்பாளரான பிரசாந்தி ரெட்டியிடம் தோல்வியடைந்தார். இதனால் அதிருப்தியில் இருந்து வரும் பிரசன்ன குமார், அவ்வப்போது எம்.எல்.ஏ. பிரசாந்தி ரெட்டியை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.  பிரசாந்தி ரெட்டியின் கணவர் வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் (TDP)  எம்.பி.யாக உள்ளார். இதற்கு முன்பு, பிரபாகர் ரெட்டியும் அவரது மனைவி பிரசாந்தி ரெட்டியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் (YSRCP) இருந்து வந்தனர். ஆனால், கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி,  கடந்த ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் தங்களை இணைந்து கொண்டனர்.

இந்நிலையில், கோவூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரசன்ன குமார், எம்.எல்.ஏ. பிரசாந்தி ரெட்டி குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியுள்ளார். அதில், "பிரசாந்தி ரெட்டி, தனது கணவர் பிரபாகர் ரெட்டியை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். பிரபாகர் ரெட்டி தூக்கத்தில் இருக்கும்போது பிரசாந்தி விஷம் கொடுத்து கொல்லக்கூடும். கவனமாக இருங்கள், ஒருவேளை நீங்கள் வீட்டிற்குள்ளோ அல்லது வெளியேவோ கொல்லப்படலாம்," என்று கூறியுள்ளார். மேலும், "பிரபாகர் ரெட்டி விரும்பினால், இளம் பெண்ணைத் திருமணம் செய்து அவருக்கு பதவி வாங்கிக் கொடுக்கலாம்," என்று கூறி, பிரசாந்தி ரெட்டி எம்.எல்.ஏ. பதவிக்குத் தகுதியற்றவர் என விமர்சித்துள்ளார்.  இதனை கேட்டு மேடையில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் சிரித்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவியது. இதனால், கோவூர் தொகுதி முழுவதும் பெரும் சீற்றம் ஏற்பட்டது. பிரசன்ன குமார் தொகுதிக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டுமெனப் பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலுங்கு தேசம் கட்சியின் பெண் நிர்வாகிகள், கோவூர் காவல் நிலையத்தில் பிரசன்ன குமார் மீது புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் எஸ். சவிதா, "ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் மீண்டும் பெண்களைக் குறிவைத்தே பேசுகின்றனர். பெண்களைத் துஷ்பிரயோகம் செய்வதுதான் உங்கள் கட்சியின் முக்கியக் கொள்கையா? ஒரு பெண்ணிடம் தோற்றதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள். அவரது பணியில் குறை இருந்தால் விமர்சிக்கலாம், ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அவதூறு பரப்புவது ஏற்றுக்கொள்ள முடியாது. பிரசன்ன குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்று கூறியுள்ளார். மேலும், பிரசன்ன குமாரின் கருத்துக்கு கடும் ஆட்சேபனை  தெரிவித்துள்ள ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண், பெண்கள் சமூகம் இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும்," என்று கூறியுள்ளார்.

Advertisment

இதற்கிடையில், நெல்லூரில் உள்ள பிரசன்ன குமார் ரெட்டியின் வீடு, சாவித்திரி நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. இரண்டு கார்கள் உடைக்கப்பட்டு, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும், வீட்டிலிருந்து சில பொருட்கள் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை தெலுங்கு தேசம் கட்சியினரும், எம்.பி. வேமிரெட்டி பிரபாகர் ரெட்டியின் ஆதரவாளர்களும் நடத்தியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது, இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.