ஜப்பான் நாட்டின் வடக்கு ஜப்பானின் ஹோன்சூ தீவில் உள்ள அமோரி நகரத்தில் நேற்று  (08.12.2025) இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5ஆகப் பதிவாகி உள்ளது. இதனையடுத்து அங்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு அமோரியில் சுமார் 2,700 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டன். பல்வேறு இடங்களில்  தீ விபத்துகள் பதிவாகி உள்ளன என கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Advertisment

இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கிருந்த கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பலரும் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட அதிர்வுகள், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷிங்கன்சென் புல்லட் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் தண்டவாளங்களில் ஏதேனும் சேதம் உள்ளதா எனப் பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 

Advertisment

இது தொடர்பாகப் பிரதமர் சனே டகாச்சி கூறுகையில், “நேற்று இரவு வடகிழக்கு ஜப்பானைத் தாக்கிய 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். பசிபிக் கடலோரப் பகுதிகளில் இதேபோன்ற அல்லது இன்னும் கடுமையான அதிர்வுகள் ஏற்படக்கூடும். தயவுசெய்து ஒரு வாரத்திற்கு ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (ஜே.எம்.ஏ.) அல்லது உள்ளூர் அரசாங்கங்களின் தகவல்களைத் தொடர்ந்து கவனித்து வாருங்கள். 

நிலநடுக்க அதிர்வுகளை உணரும்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தயாராக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார். ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனத்தின் (JMA) ஆய்வின் படி, இந்த நிலநடுக்கம் இரவு 11.15 மணியளவில் அமோரி மாகாணத்தின் பசிபிக் கடலோரத்தில் 54 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. இதன் காரணமாக 70 செமீ  உயரம் வரையிலான சுனாமி அலைகள் எழுந்தன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment