ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (01.09.2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் நகங்கர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத்தை மையமாகக் கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் 4.5 என்ற அளவில் பதிவாகி இருந்தது.
இதனால் கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி மற்றும் சபடேர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலநடுக்கங்களின் பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. அதே சமயம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக நிலநடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் அங்கிருந்த கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட அதிர்வுகள், வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் இடிந்து விழும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன, மேலும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.