பீகார் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில், 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

Advertisment

இந்த நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (11-11-25) 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 67.14 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். முதற்கட்ட வாக்குப்பதிவின் போது 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் அதிகம் பேர் வாக்களித்திருப்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரின், ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்டன. கடந்த 6ஆம் தேதி மற்றும் இன்று என இருகட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 14ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில், பீகாரின் 243 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஒவ்வொரு ஊடகங்களும் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், டைம்ஸ் நவ் (Times Now) என்ற செய்தி நிறுவனம் தேசிய ஜனநாயகக் கூட்டணி 142 - 145 இடங்களிலும், மகாகத்பந்தன் கூட்டணி 88-91 இடங்களிலும், பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 1 இடத்தையும் கைபற்றும் எனத் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, மேட்ரிஷ் (MATRIZE) என்ற செய்தி நிறுவனம், 147 -167 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றும், 70-90 இடங்களில் மகாகத்பந்தன் கூட்டணி வெற்றி பெற்றி பெறும், ஜன் சுராஜ் கட்சி 2 இடங்கள் வரை கைபற்றும் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisment

இதையடுத்து, பீப்பிள் பள்ஸ் (Peoples Pulse) என்ற செய்தி நிறுவனம் தேசிய ஜனநாயகக் கூட்டணி 133-159 இடங்களிலும், மகாகத்பந்தன் கூட்டணி 75-101 இடங்களிலும், ஜன் சுராஜ் 5 இடங்கள் வரை வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளது. ஜேவிசி என்ற செய்தி நிறுவனம், தேசிய ஜனநாயகக் கூட்டணி 133-150 இடங்களிலும், மகாகத்பந்தன் கூட்டணி 88-103 இடங்களிலும், ஜன் சுராஜ் 1 இடத்தையும் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. இப்படி பல ஊடகங்களும் பீகாரில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.