கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தற்பொழுது வரை விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் முதலாவது ஆண்டு நினைவு தினம் அக்கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதனையொட்டி அவரது நினைவிடம் அமைத்துள்ள திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியினர் சார்பில் பேரணி நடைபெற்றது. மேலும் அவரது நினைவிடத்தில் அவரது முழு உருவச்சிலை திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி துணை ஆணையர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, பேரணியில் பங்கேற்றுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும், இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி' (TM BSP) என்ற பெயரில் கட்சி பெயரை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அறிவித்துள்ளார்.