கடந்த 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக ஏராளமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. அதே சமயம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது.

Advertisment

அதன்படி, விசாரணையைத் தொடங்கிய அருணா ஜெகதீசன், சம்பவம் நடந்த இடம், மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தினார். மேலும், சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டியிருப்பதால், அறிக்கை சமர்ப்பிப்பதில் காலதாமதமாகும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஏ.டி.எஸ்.பி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

அனுமதி வழங்கப்பட்ட நேரத்தைத் தாண்டி காலதாமதமாக விஜய் பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், தாங்கள் கேட்ட இடத்தில் அனுமதி தராமல், குறுகிய இடத்தில் அனுமதி வழங்கியதே இதற்குக் காரணம் என்று த.வெ.க. கூறுகின்றனர். இது தொடர்பாக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் மதியழகனைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே, கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து இருந்தனர். இந்த நிலையில், பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கரூர் சம்பவம் குறித்து தனது யூடியூப் சேனலின் அவதூறு பரப்பும் வகையில் பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisment