அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த பொன்முடி, சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் குறித்தும், சைவ - வைணவ சமயம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் பலரும் அதற்கு எதிர்வினையாற்றி வந்தனர். பொன்முடியின் பேச்சுக்கு திமுகவிலே கண்டன குரல்கள் எழுந்தது.
இவரது பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு திருச்சி சிவா எம்.பி. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், பொன்முடிக்கு திமுகவில் மீண்டும் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவில் துணைப் பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கை 5ஆக உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 2 பேருக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பொன்முடி எம்.எல்.ஏ, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக பணியாற்றி வந்த மு.பெ.சாமிநாதன் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக இல.பத்மநாபன் திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இல.பத்மநாபன், திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக, கே.ஈஸ்வரசாமி, எம்.பி, திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு, வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு ஆகிய இரண்டு மாவட்டக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது. அவ்வாறு பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய தொகுதிக்களுக்குட்பட்ட வேலூர் தெற்குக்கு ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ மாவட்ட பொறுப்பாளராகவும், காட்பாடி கீழ்வைத்தியணான்குப்பம் ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட வேலூர் வடக்குக்கு டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி மாவட்ட பொறுப்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/04/ponmudi-2025-11-04-15-35-07.jpg)