முன்னாள் அமைச்சர் பொன்முடி ஒரு கருத்தரங்கில் பேசுகையில் சைவ வைணவம் குறித்தும், பெண்கள் தொடர்பாகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ் குமார் அமர்வில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி (22.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர், “இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தி முகாந்தரம் இல்லை என்று புகார் முடித்து வைக்கப்பட்டுவிட்டது. 

Advertisment

இது குறித்துச் சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது” எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “புகார்களில் முகாந்தரம் இல்லை என்று எந்த அடிப்படையில் காவல்துறை முடிவுக்கு வந்தது” எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த தலைமை வழக்கறிஞர், “கடந்த 1972ஆம் ஆண்டு அப்போதைய சமூக சீர்திருத்தவாதி தெரிவித்த கருத்துக்களையே முன்னாள் அமைச்சர் பொன்முடி தற்போது தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை முழுமையாகப் பார்த்தால் விவரங்கள் அனைத்தும் தெரியவரும்” என்று விளக்கமளித்தார். 

Advertisment

இதனையடுத்து நீதிபதி, “முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய அந்த பேச்சு அடங்கிய முழு வீடியோவையும், 1972ஆம் ஆண்டு அப்போதைய சமூக சீர்திருத்தவாதி பேசிய பேச்சு அடங்கிய விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் சைவ வைணவம் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய முழு வீடியோவை உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து வீடியோ ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு விசாரிக்கப்படும் என்று நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு செப்டம்பர் 16 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.