உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாளான 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்த நாள் (ஜனவரி 16) மாட்டுப் பொங்கல், அதனைத் தொடர்ந்து ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை என 5 நாட்கள் தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்து விதமான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவைப் பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. முன்னதாக தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது.
அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாகக் கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000/-வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Follow Us