தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலுள்ள அனைத்து ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மூவாயிரம் பொங்கல் பரிசு அறிவித்தது தமிழகம் எங்கிலும் புத்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஏழை எளிய அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க குடும்பத்தினர் மத்தியிலே இனம் புரியாத பூரிப்பு. இதனிடையே ரேசன் கார்டு இல்லாத தனது இரண்டாவது மனைவிக்கு பொங்கல் பரிசு தரப்பாடாததைத் தொடர்ந்து ஆவேசத்தில் ரேசன் கடையின் கைரேகை இயந்திரத்தை கூலித் தொழிலாளி ஒருவர் தூக்கிக்கொண்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

Advertisment

தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த லிங்கதுறையின் மகன் ரமேஷ். கட்டிடத்தொழிலாளி. இவரது முதல் மனைவி மூக்கம்மாள். இவர்களுக்கு சூர்யா என்னும் மகன் உள்ளார். மூக்கம்மாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்திருக்கிறார். அதையடுத்து மகாலட்சுமி என்பவரை ரமேஷ் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டு தனியே வசித்து வருகிறார். அவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது என்று சொல்லப்படுகிறது. முதல் மனைவியின் மகன் சூர்யா தனது தாத்தா லிங்கதுறையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜன. 12ம் தேதி மாலை ரமேஷ் தனது இரண்டாவது மனைவி மகாலட்சுமியுடன் அப்பகுதியிலிருக்கும் ரேஷன் கடைக்கு சென்று தனக்கான பொங்கல் பரிசைத் தரும்படி விற்பனையாளர் ராசுக்குட்டியிடம் கேட்டிருக்கிறார். 

Advertisment

இந்தக் கார்டுக்குள்ள பரிசுத் தொகையை உங்களது மகன் வாங்கிச்சென்றுவிட்டார் எனத் தெரிவித்துள்ளார். 3000 பரிசு போச்சே என்ற ஆத்திரத்தில், யோவ் அது என் மொத பொண்டாட்டி மகன்யா. இப்ப என் இரண்டாவது பொண்டாட்டிக்குள்ள பரிசுத் தொகுப்பக் கொடு என்று ரமேசும் இரண்டாவது மனைவி மகாலட்சுமியும் ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்திருக்கின்றனர். அங்கிருந்த பொது மக்கள் அவர்களை சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை. ஆனால் ஆத்திரம் தீராத தொழிலாளி ரமேஷ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி மகாலட்சுமியும் ரேஷன் கடையில் இருந்த கைரேகை வைக்கும் இயந்திரத்தைத் தூக்கிச் சென்று ஓடியிருக்கிறார்கள். 

pongal-gift-issue-1

இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பரிசுத் தொகுப்பு வழங்கமுடியாமல் தடைபட்டதால் பதறிப்போன ரேஷன் கடை ஊழியர்கள் இயந்திரத்தை தூக்கிச் சென்ற தொழிலாளி மற்றும் அவரது இரண்டாவது மனைவியைத் தேடி ஓடியிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் சிக்காமல் போகவே சம்பவம் குறித்து உடனடியாக விற்பனையாளர் ராசுக்குட்டி அளித்த புகாரின் அடிப்படையில் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தனது போலீஸ் டீமுடன் தேடுதலை மேற்கொண்டவர் ஒருசில மணிநேரத்தில் தொழிலாளியையும் அவரது இரண்டாம் மனைவியையும் கைது செய்து இயந்திரத்தை ரேஷன் கடையில் ஒப்படைத்திருக்கின்றனர். இந்தப் பரபரப்பான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. புருஷன் பொண்டாட்டி சண்டையெல்லாம் தீர்த்துவைக்ற பஞ்சாயத்த வேற செய்யவேண்டியிருக்கிறதே என ரேஷன் கடை ஊழியர்கள் தலையில் அடித்துக் கொண்டனர். 

Advertisment