கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் காமராஜரின் உருவச் சிலைக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த 7ஆம் தேதி மாலையிட்டு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது, அவரும், கன்னியாகுமரி மாவட்ட திமுக நிர்வாகிகளும் கருப்பு சட்டை அணிந்து மரியாதை செலுத்தினர்.
காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தும் போது கருப்பு சட்டை அணிந்து மரியாதை செலுத்தியதற்கு பா.ஜ.க மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “மனோதங்கராஜ் கடந்த ஏழாம் தேதி, அனைவராலும் வணக்கத்திற்குரிய இடமாக போற்றப்பட்டு கொண்டிருக்கக்கூடிய பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்திற்கு சென்று கருப்பு சட்டை அணிந்து கருப்பு தினத்தை கடைபிடித்திருக்கின்றார். காமராஜரை ஒருவர் அவமானப்படுத்திருக்கிறார் என்றால் அவர் ஒரு தேசத்துரோகி. அந்த தேச துரோக செயலை செய்திருக்கும் மனோ தங்கராஜை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். காமராஜருடைய சிலைக்கு கருப்பு துணி போடுவதோ, ஒரு காலி கூட்டத்தை கூட்டிட்டு அங்கே போய் கருப்பு தனத்தை கொண்டாடுவதோ எந்த வகையில் நியாயம் ?.
1966ஆம் ஆண்டில் காமராஜருடைய வீடு எரிக்கப்பட்டது என்று அவர் எந்த சாட்சியத்தை வைத்து சொல்கிறார். தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை எல்லாம் முழுங்கி கேரளத்திற்கு கடத்திச் சென்ற ஒரு கடத்தல் மன்னன் இவர், இந்த வார்த்தையை சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது? காமராஜருடைய நினைவிடத்தில் அடியெடுத்து வைப்பதற்கு அருகதையற்ற ஒரு மனிதர் இந்த மனோ தங்கராஜ். அங்கே போய் காமராஜரை அவமானப்படுத்திருக்கிறார். 1966இல் ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்தவர்கள் காமராஜருடைய வீட்டை எரித்தார்கள் என்று சொல்கிறார்கள். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி இவர்களெல்லாம் எப்படிப்பட்ட நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ்ஸில் வைத்திருந்தார்கள் என்பது எல்லாம் தெரியும்.
குடியரசு தின ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எப்படி அனுமதித்தார்கள். அன்றைக்கு அனுமதிக்கும் போது இந்தியாவில் தலைசிறந்த பொதுநல அமைப்பு என்று ஆர்.எஸ்.எஸ் தெரிந்தது தானே. இன்றைக்கு எப்படி இந்த வார்த்தைகளை பேசுகிறார்?. இவர் ஒரு சந்தரப்பவாதி. இவருக்கு காமராஜர் மேலேயும் பக்தி கிடையாது, தன்னுடைய குடும்பத்து மேலேயும் பக்தி கிடையாது. மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும். காமராஜருடைய நினைவிடத்தை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி இருக்கக்கூடிய மனோ தங்கராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட வேண்டும். பழைய காலத்தில், காமராஜர் மேல் வைத்திருந்த வெறுப்பை இப்போது நீங்கள் காட்டாதீர்கள் தமிழக முதல்வரே. எங்களை பொறுத்தவரைக்கும் அது வழிபடும் ஆலயம். பெருந்தலைவர் காமராஜடைய நினைவிடம் என்பது வழிபடக்கூடிய ஒரு ஆலயம். தமிழக முதல்வர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், காமராஜரை அவமானப்படுத்திய காரணத்திற்காக தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/09/kamapon-2025-11-09-22-26-17.jpg)