தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி, அந்தந்த மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்தச் சூழலில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள், கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கேரளாவில் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர் ஒருவர் வேலை பளு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம் பையனூரை அடுத்த எட்டுக்குடுக்கா பகுதியைச் சேர்ந்த அனீஷ் ஜார்ஜ். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கேரளாவில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், பையனூர் தொகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் அனீஷ் ஜார்ஜ் ஈடுபட்டார்.

Advertisment

இதற்கிடையில், தொடர் வேலை பளுவாலும்,  உடல்நல பிரச்சனையாலும் அனீஷ் ஜார்ஜ் அவதியடைந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது அலுவலகத்தில் அனீஷ் ஜார்ஜ் தற்கொலை செய்து கொண்டார். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் வேலை பளு காரணமாக தான் அனீஷ் ஜார்ஜ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அனீஷ் ஜார்ஜ் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.