Skip to main content

''ஒவ்வொருவர் குடும்பத்திலும் நீங்கள் அங்கமாக மாற வேண்டும்''-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

 "You should become a part of everyone's family" - Chief Minister M. K. Stalin's speech

 

மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், ''இது திருப்பூர். திராவிட இயக்கம் கருவான ஊர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் முதன்முதலில் சந்தித்துக் கொண்ட ஊர் தான் திருப்பூர். அந்த வகையில் பல்வேறு அரசியல் திட்டங்களுக்கு அடித்தளமிட்ட ஊர் தான் திருப்பூர். இன்று திருப்பூர் தியாகத்தின் திருவுருவமாக போற்றப்படக்கூடிய கொடிகாத்த குமரன் வாழ்ந்த ஊர் இந்த திருப்பூர். இந்தியை எதிர்த்து தமிழைக் காக்கவும் 1965 ஆம் ஆண்டு போராட்டம் நடந்தபோது கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல பள்ளி மாணவர்களும் அதிகம் பங்கு எடுத்த ஊர் தான் இந்த திருப்பூர். இப்படிப்பட்ட பெருமையும் மிக்க திருப்பூரை மாநகராட்சியாக  உயர்த்தியது மட்டுமல்ல திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கியவர் கலைஞர்.

 

இப்படிப்பட்ட பெருமைக்குரிய திருப்பூரில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நல்லபடி ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிற அமைச்சர் மு.பெ.சாமிநாதனை நான் பாராட்டுகிறேன். இளைஞர் அணியில் என்னுடன் தொடக்க காலத்தில் இருந்தே பயணித்தவர் தான் சாமிநாதன். நாடாளுமன்ற தேர்தலில் தொடக்கப் புள்ளியாக முகவர்கள் கூட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலில் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பாளர்கள். அதை மறந்து விடக்கூடாது. நாற்பதும் நமதே நாடும் நமதே என நான் முழங்குகிறேன் என்றால் அவை எல்லாம் நான் உங்கள் மீது வைத்த நம்பிக்கை தான். இன்றிலிருந்து கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் என்ற கம்பித்தோடு நீங்கள் கடமையாற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். வெற்றி மட்டுமே உங்கள் இலக்காக இருக்க வேண்டும். அதை நோக்கி பயணிக்க வேண்டும். உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது தான் உங்களுடைய முக்கியமான முதல் கடமை.

 

நம்முடைய சாதனைகளை தொடர்ந்து நீங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். வாக்குப்பதிவு நாட்களில் வாக்காளர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு வர வைப்பது உங்களுடைய முக்கிய கடமை. உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் நீங்கள் அங்கமாக மாற வேண்டும். அதற்கு முதலில் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரை பற்றியும் முழுமையாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான மாதிரி படிவம் உங்கள் கையில் வழங்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக அச்சிடப்பட்டு சீக்கிரமே உங்கள் கையில் வந்து சேரும். வாக்காளர் உடைய பெயர்; அவருடைய வயது; அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யார் யார்; என்னென்ன படித்திருக்கிறார்கள்; என்ன தொழில் செய்கிறார்கள்; எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்ற முழு விவரமும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்கள் வாக்குச்சாவடியில் 200 குடும்பங்கள் இருந்தால் அந்த குடும்பங்களில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை; வரவும் கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் ஒதுக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்போம் என்று பிரதமர் கூறினாரே மீட்டாரா? ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் என்று மோடி சொன்னாரே ஏற்படுத்தி தந்தாரா? படிக்கும் பட்டதாரிகளாக இருக்கும் நம் இளைஞர்களை பக்கோடா விற்க சொல்கிறார் மோடி'' என விமர்சித்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்