“எனது அமைச்சரவையில் யாரையும் நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை” - முதல்வர் கடிதம்

 'You have no power to remove anyone in my cabinet'-Chief Minister's letter

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.

தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை நேற்று மாலை வெளியிட்டது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து ஆளுநரின் முடிவு நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சட்ட ஆலோசகர்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்பொழுது அந்த கடிதத்தின் முழு விவரங்கள் வெளியாகி உள்ளது.அதில், ''எனது அமைச்சரவையில் யாரையும் நீக்கும் அதிகாரம் உங்களுக்கு (ஆளுநருக்கு) இல்லை. சட்ட ஆலோசனை கூட பெறாமல் முக்கிய முடிவை எடுத்துள்ளதிலிருந்தே தெரிகிறது. மாநில மக்களின் நம்பிக்கையே எங்களின் வலுவான சொத்தாக இருக்கிறது. செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைச்சரை நீக்க பிரதமர் அல்லது முதல்வருக்கே அதிகாரம் உள்ளது. அமைச்சர்களாக யார் இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்பதை நான் தான் முடிவு செய்வேன். வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய பிறகு தான் அமைச்சர் பதவியில் தொடரும் வாய்ப்பை இழப்பார். முதல்வரின் பரிந்துரைப்படியே அமைச்சர்களை சேர்க்கவும் நீக்கவும் ஆளுநரால் முடியும் என சட்டம் கூறுகிறது. என்னுடைய பரிந்துரை இல்லாமல் அமைச்சரை நீக்குவது வரம்பு மீறிய செயல். தமிழக கலாச்சாரத்தின் படி ஆளுநருக்கு உரிய மரியாதை அரசு வழங்கி வருகிறது. மரியாதை தருவதால் அரசமைப்புச் சட்டத்தை மீறி நடவடிக்கைக்கு அடிபணிய வேண்டும் என்பதில்லை'' எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

governor
இதையும் படியுங்கள்
Subscribe