Skip to main content

'வந்து போட்டோவை பாக்குறதுக்கு வாட்ஸ் ஆப்ல பார்த்துட்டு போயிடலாமே;எதுக்கு வர்றீங்க' - சீமான் கேள்வி   

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
nn

சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நிதி ஆணையத்தின் விதிப்படியே மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து வழங்கப்படுகிறது. நிதிப் பங்கீட்டில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. தமிழகத்திற்கு மத்திய அரசால் 2014 முதல் 2023 மார்ச் வரை வழங்கப்பட்ட நிதி ரூ. 2 லட்சத்து 88 ஆயிரத்து 627 கோடியாகும். இந்த தொகைக்கான மானியமாக ரூ. 2 லட்சத்து 58 ஆயிரத்து 338 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலிருந்து பெற்றதைவிடவும் அதிகமாக கொடுத்திருக்கிறோம். 2014 - 2023 மார்ச் வரை தமிழ்நாட்டிடமிருந்து மத்திய அரசு ரூ.6 லட்சத்து 23 ஆயிரம் லட்சம் கோடியை வரியாக பெற்றிருக்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.6 லட்சத்து 96 ஆயிரம் லட்சம் கோடியைக் கொடுத்திருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எண்ணூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர். 'கவர்மெண்ட் நடத்துகிறீர்களா அல்லது கந்துவட்டி நடத்துகிறீர்களா? என் வரியை நீங்கள் எடுத்துக் கொண்டுபோய் விட்டு தேவைப்படும்போது கொடுக்கிறேன் என்றால் உன்னுடைய (மத்திய அரசு) வேலை என்ன? உங்களுக்கு ஒரு வேலையும் இல்லையா? நீங்கள் எதற்காக என் வரியை எடுத்துக் கொண்டு போய் பிறகு திருப்பி தரணும். அந்த வரியை நீயே வைத்துக் கொண்டு நிர்வாகம் செய் என்று சொல்லத் தெரியாதா உங்களுக்கு.

nn

எங்களுடைய வரியை எடுத்துட்டு போயிட்டு பிறகு பேரிடர் காலங்களில் நாங்கள் கெஞ்சனும். அப்புறம் நீங்க கொடுக்கணும். இது என்ன உங்க காசா? எல்ஐசியின் 60% பங்கு வித்தாச்சு. இந்த நாட்டின் பொதுச்சொத்து மூலம் வருவாய் பெருகும் என்று மத்திய அரசுக்கு ஏதாவது உள்ளதா? பேரிடர் காலங்களில் கூட நாங்கள் உங்களிடம் பிச்சை எடுக்க வேண்டுமா?

இதுவே குஜராத்தில், பீகாரில், உத்திரப்பிரதேசத்தில் வெள்ளம், புயல் என்றால் இப்படி கேவலமாக பேசிக் கொண்டிருப்பீர்களா? உடனே பறந்து வருவீர்கள். அடுத்த நொடிக்கு 500 கோடி அறிவிப்பீர்கள். நான் ஒரு ரூபாய் வரி கொடுத்தால் 40 காசு திருப்பி தருவீங்க. ஆனால் அவன் ஒரு ரூபாய் கொடுக்கிறான் மூன்று ரூபாய் என்பது காசை திருப்பிக் கொடுக்கிறார்கள். அப்போ இந்தி பேசுபவன்தான் இந்தியனா?. இந்தி பேசுகின்ற மாநிலங்கள் தான் இந்தியாவா.

நிதியமைச்சர் தூத்துக்குடி வந்தாங்கல்ல நானும்தானே களத்தில் நின்றேன். ஊரு ஊரா போய் பார்த்தேன். ஆனால் இவர்கள் என்ன பண்ணினார்கள் சாலையில் ஒரு ஓரமா வைத்த பதாகையில் பாதிக்கப்பட்ட இடங்களை போட்டோ எடுத்து ஒட்டி, ஒரு பந்தலை போட்டு அதை பார்வையிட்டு விட்டு செல்கிறார். அப்படி பார்ப்பதற்கு அங்கிருந்து வாட்ஸ் அப்பில் அனுப்ப சொல்லி பார்த்து விடலாமே. எதுக்கு வர்றீங்க. இதேதான் ஓகி புயலின் போது பிரதமர் மோடியும் பண்ணினார். ஒரு இடத்தில் பதாகையில் ஒட்டி வைத்திருந்த படங்களை பார்த்துவிட்டு போய்விட்டார். அதற்கு எதற்கு நீங்கள் வருகிறீர்கள். இன்ஸ்டாகிராம் இருக்கிறது, இன்டர்நெட் இருக்கிறது, வாட்ஸ் அப் இருக்கிறது.  அதில் பார்த்துக் கொள்ளலாமே. எங்களை மாற்றான் தாயாகக் கூட இல்லை, எங்களை உயிராகவே மதிப்பது கிடையாது. மோடிக்கு திருச்சி விமான நிலைய விரிவாக்கத்தை திறந்து வைக்க நேரம் இருக்கிறது. ஆனால் வெள்ளத்தில் குறைந்தது 50 பேர் செத்து போனோம். தூத்துக்குடி என்ற ஒரு மாவட்டமே அழிந்து போய்விட்டது. அதை வந்து பார்வையிட முடியாதா?'' என்றார்.

சார்ந்த செய்திகள்