“நீங்கள்தான் போலி விவசாயி” - முதல்வருக்கு இ.பி.எஸ். பதிலடி!

You are a fake farmer EPS response to the CM mk stalin

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை குறிப்பிட்டு நீங்கள்தான் போலி விவசாயி என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு அருகில் 11.06.2025 அன்று நடைபெற்ற அரசு விவசாய கண்காட்சி விழாவில், திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். மேலும், என்னைப் பற்றியும் பேசியுள்ளார். தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல.

பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம். நான் ஒரு விவசாயி எனபதை பெருமையாகக் கூறுவதோடு, இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன். விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத, விவசாயிகளின் கஷ்டத்தையும், வியர்வையையும், வேதனையும் அறியாத ஒரே முதலமைச்சர், விளம்பரம் மூலம் ஆட்சி புரியும் மு.க. ஸ்டாலின் மட்டுமே. ‘நான் உண்மையான விவசாயியா ? நீங்கள் உண்மையான விவசாயியா?’. நீங்கள்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். எனவே எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இல்லை.

தமிழக மக்கள் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது யார் உண்மையான விவசாயி என்பதையும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்ட ஜெயலிதாவின்அரசை மனதில் நிறுத்தியும், இன்று சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள், போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் இந்தியாவிலேயே அதிக அளவு கடன் வாங்கி முதலிடத்தைப் பெற்றிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும், தமிழக மக்கள் மனதில் சீர்தூக்கிப் பார்த்து, திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் போது, தமிழக மக்களின் எதிர்ப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

admk Farmers mk stalin
இதையும் படியுங்கள்
Subscribe