Advertisment

“உலகளவில் நமது தேசத்திற்கு தலைகுனிவு” - திருமாவளவன் வருத்தம்

publive-image

Advertisment

கடலூர் மாவட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கியுள்ளது. இதுவரை 275 பேர் பலியாகியுள்ளனர் என்ற தகவல்கள் வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துக்கு ரயில்வே துறை மற்றும் மத்திய அரசின் அலட்சியப் போக்குதான் காரணம் என அத்துறை சார்ந்த வல்லுநர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தென்கிழக்கு ரயில்வேமண்டலத்தின் பொது மேலாளர் அங்குள்ள பிரச்சனைகள் குறித்து ஏற்கனவே ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியதாகச் சொல்கிறார்.

சிஏஜி அறிக்கையில் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்பட்டு இருந்தது என்றும் அது ஆட்சியாளர்களால் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளிவருகிறது. அந்த அறிக்கையின் படி நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். ரயில்வே அமைச்சர் பதவி விலகி முழுமையான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு விபத்தினை தேசம் சந்தித்திருப்பது உலக அளவில் நமக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. மம்தா பானர்ஜி அமைச்சராக இருந்த காலத்தில் விபத்தை தவிர்ப்பதற்கான பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதுதான் இந்த ஆட்சியில் ‘கவாச்’ எனப்படும் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் அதைக்கூட இவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. அண்மையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தபோது கூட இத்திட்டத்திற்கு கிட்டத்தட்ட ரூ.1000 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 1 ரூபாய் கூட எடுத்து செலவு செய்யவில்லை எனத்தெரிய வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம் என்பவர்களுக்கு இந்து ராஷ்டிரம் அமைப்போம் என்கிறவர்களுக்கும் மோடி மந்திரி பதவி கொடுக்கிறார். வெறுப்பு அரசியலுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அளிக்கப்படுவதில்லை என இந்த சம்பவங்கள் உறுதிப்படுத்துகிறது. இந்த விபத்து குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை பிரதமர் வெளியிட வேண்டும். சிபிஐ விசாரணைக்கும் சிறப்பு புலனாய்வு விசாரணை ஆணையத்தையும் அமைக்க வேண்டும்” எனக் கூறினார்.

vck Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe