Skip to main content

தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா ஒவைசி..?

Published on 15/01/2021 | Edited on 15/01/2021
Will Owaisi make an impact in Tamil Nadu

 

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய காட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரச்சார பணிகளை துவங்கியுள்ளன. ஒருபுறம் மக்களை சென்றடையும் வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் கூட்டணிக்குள் சீட் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், ஒவைசியின் கட்சியும் தமிழக தேர்தலில் களம்காண வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. 

 

பீகார், தெலுங்கானா தேர்தல்கலில் களமிறங்கி கணிசமான வாக்குகளைப் பிரித்த உருது பேசும் இஸ்லாமியரான ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தமிழகத் தேர்தல் களத்தில் போட்டியிட தயாராகி வருகிறது என்பது அத்தனை எளிதாகப் பார்க்கக்கூடிய விஷயமல்ல.

 

நாம் பரவலாக இஸ்லாமிய மக்கள் மற்றும் அவர்கள் சார்ந்த இஸ்லாமிய கட்சி அமைப்புகள் என்று பேசியதில், பீகாரில் உருது பேசும் முஸ்லீம்கள் கணிசமாக பரவியிருப்பதால் தான் அவர்களின் வாக்குகள் மொத்தமாக எதிரணிக்கு சென்றுவிடாமல், ஒரு கட்சியின் (ஓவைசியின்) பக்கம் மொத்தமாக ஒதுங்கியது.

 

அதே போன்றதொரு ஃபார்முலாவை வரப்போகும் தேர்தலில் மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் பா.ஜ.க. பயன்படுத்தப்படவிருக்கிறது என்ற தகவல்கள் படபடப்பதிலும் அர்த்தமிருக்கிறது. ஆனால் பீகார் மற்றும் மேற்கு வங்கக் களத்தோடு ஒப்பிடமுடியாத பூகோள அமைப்பைக் கொண்டது தமிழகம்.

 

குறிப்பாக மேற்கு வங்கத்தில் சியால்டா மிட்னாபூர், கரக்பூர், ஜார்க்ராம், புரூலியா பங்குரா, பர்த்வான், அசன்சால் ராணிகஞ்ச், ராம்பூர்காட் சைன்தியா,முர்ஷிதாபாத் என வங்கதேசத்தை ஒட்டியுள்ள மேற்குவங்கத்தின் நகரங்களையும் கிராமங்களையும் உள்ளடக்கிய ஒன்பதிற்கும் மேலான மாவட்டங்களில் உருது பேசும் முஸ்லிம்கள், மெஜாரிட்டியாக உள்ளனர். அம்மக்களுக்கான உரிமைகள், நலத்திட்டப்பணிகளை மேற்கொண்டும், அவர்களோடு முதல்வர் மம்தா பானர்ஜி மிக இணக்கமாக இருந்தாலும், ஓவைசியின் வரவு தனக்கான உலைக்களமாகிவிடுமோ என்று மம்தா யோசிப்பதிலும் அர்த்தமிருக்கிறது. ஆனால் ஓவைசியோ நான் யாருடைய பி.டீமும் அல்ல என்று கூறுகிறார். மாறாக தமிழகத்தின் சூழலோ எல்லா வகையிலும் மாறுபட்டதாகவே உள்ளது என்கிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள்.

 

Will Owaisi make an impact in Tamil Nadu

 

 

ஓவைசி தமிழக அரசியல் குறித்து நாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் (த.ம.மு.க.) அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்டத் தலைவரான ரசூல் மைதீனிடம் பேசியபோது.

 

”தமிழகத்தில் தேசியக் கட்சிகள் செல்லுபடியாகாது. இங்கே மாநிலக் கட்சிகளான திராவிடக் கட்சிகளுக்குத் தான் மக்கள் வரவேற்பு அளிப்பார்கள். அதே போன்று முஸ்லிம் மக்கள் அரசியல் ரீதியாக உரிமைகளைப் பெற பல அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் 1995ன் போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் பேராசிரியர் ஜவஹிருல்லாவை தலைவரராகக் கொண்ட அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டு பின் முஸ்லீம் மக்களின் உரிமைகளைப் பெற அரசியல் ரீதியான மனித நேய மக்கள்கட்சி என்ற அரசியல் பிரிவாகச் செயல்பட்டு வருகிறது. இது பல்வேறு தரப்பினரைக் கொண்ட பன்முகத்தன்மையுடையது. குறிப்பாக சரவணபாண்டியன் என்பவர் டெல்டா மாவட்டத்தின் துணை பொ.செ. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஜோசப் நல்லஸ்கோ தூத்துக்குடி மாவட்டத்தின் துணை பொ.செ. உருது பேசும் முஸ்லிம்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்று எங்களுக்குள் எந்தவித பேதமும் கிடையாது. உருது பேசும் முஸ்லிம்களும் எங்கள் அமைப்பில் உள்ளனர். நிர்வாக ரீதியாகப் பொறுப்பும் பிரதிநிதித்துவமும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. தென்மாவட்டம் தவிர்த்து வாணியம்பாடி, ஆம்பூர், சேப்பாக்கம் போன்ற பகுதிகளில் மட்டுமே உருது பேசும் முஸ்லிம் மக்கள் உள்ளனர். குறிப்பாக 2011 தேர்தலில் எங்கள் கட்சியின் உருது பேசும் அஸ்லம் பாதுஷாவை ஆம்பூர் தொகுதியில் போட்டியிடவைத்து வெற்றி பெறச் செய்தோம். அதுபோன்று உருது பேசும் முஸ்லிம்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது. அப்படியான உரிமையில்லாவிட்டால் தானே அவர்களுக்குப் பிரச்சனை. அதுபோன்ற பிரச்சனைதான் இல்லையே.

 

தவிர சிறுபான்மைக்கு எதிரானவர்கள் பா.ஜ.க.வினர் என்கிற எண்ணம் முஸ்லிம் மக்களான எங்களிடம் உள்ளது. அதனால் தான் முஸ்லிம் மக்கள் வாக்குகள் சிதறக் கூடாது என்பதைப் போன்ற எண்ணம் எங்களைப் போன்று பிற அமைப்புகளிடமும் இருக்கின்றன. மேலும் இதரகட்சிகளைப் போன்ற நிர்வாகக் கட்டமைப்பு ஓவைசியின் கட்சிக்கு இங்கு கிடையாது. பா.ஜ.க. அணியை வீழ்த்துவதில் எதிரணியான தி.மு.க. மட்டுமே என்ற மனப்பான்மை அனைத்து முஸ்லிம் அமைப்புகளிடம் உள்ளன.

 

ஓவைசிக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை, நமது எதிரணி பா.ஜ.க. தான். சிறுபான்மை மக்களான முஸ்லிம் மக்களின் நலன் முக்கியம் என்று கருதினால் அவர் தி.மு.க. கூட்டணியை தார்மீகமாக ஆதரிக்க வேண்டும். அதுதான் அவருக்குப் பொருத்தம். அதைவிடுத்து அவர் தனிமையாக நின்றால் அத்தனை வரவேற்பிருக்காது. அது பா.ஜ.க. அ.தி.மு.க.விற்கு வலிமையானதாகிவிடும். முஸ்லிம் மக்களின் சந்தேகப்பார்வையும்  விழும் என்றார் அழுத்தமாக.

 

Will Owaisi make an impact in Tamil Nadu

 

மேலப்பாளையத்தின் சமூக நல ஆர்வலரான அலிப் ஏ.பிலால் ராஜாவோ, “இங்கு தமிழ் பேசும் முஸ்லிம், உருது பேசும் முஸ்லிம் என்ற பேதமில்லை. இப்போதெல்லாம் எங்களுக்குள் கொடுக்கல் வாங்கல், மற்றும் திருமண சம்பந்தமும் நடக்கிறது. அனைவரும் கல்வியில் ஓரளவு முன்னேற்றம். அதே போன்று வாக்களிப்பதிலும் ஒற்றுமைதான். உருது பேசும் முஸ்லிம்கள் ஓவைசிக்கு வாக்களிப்பார்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் போடமாட்டார்கள் என்று பிரிவினையை ஏற்படுத்த முடியாது.

 

இரண்டாவதாக தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கு திராவிடம் சார்ந்த அரசியல் பார்வை என்ற புரிதல் இருக்கிறது. யாரை ஆதரிக்க வேண்டும். யார் வலிமை பெறுவது முஸ்லிம் மற்றும் தமிழகத்திற்கு நல்லதாக இருக்கும் என தந்தை பெரியார், அண்ணா காலந்தொட்டே அவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு இன்று வரை தமிழக மக்களிடம் இருக்கிறது. ஓவைசி பற்றி வடக்கேயுள்ள அரசியல் புரிதல் வேறு, தமிழக முஸ்லிம் மக்களின் புரிதல் வேறு. அவரை ஒரு முஸ்லிம் தலைவராக தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. 

 

வடமாநிலங்களான பீகார் உ.பி. ஆகிய இடங்களில் உருது பேசும் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். அங்கே முஸ்லிம்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான அரசியல் கட்சிகள் குறைவாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனால் இங்கே முஸ்லிம் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கக் கட்சிகள் களத்தில் வலிமையாக உள்ளன. சமூக நீதியை பேணக் கூடிய விஷயத்தில் இங்கே திராவிடக் கட்சிகளோடு இணக்கமாகப் போவதிலும், முஸ்லிம்களுக்கு அவர்கள் உரிமையைப் பெற்றுத்தருவதிலும் நம்பிக்கை இருக்கிறது. இட ஒதுக்கீடு சார்ந்த உரிமைகளும் பெறப்பட்டுள்ளன.

 

ஓவைசி பீ. டீமா என்பதைக்காட்டிலும் அவரைப் போன்ற ஒருவர் களத்தில் வந்தால்தான் இந்துக்களின் வாக்குகளைப் பெற முடியும் என்ற பார்வை பி.ஜே.பி.க்கு இருக்கிறது. ஓவைசி வருவதால் நம் மண் சார்ந்த அரசியல் பாரம்பரியத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.

 

தேர்தல் களத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால் தமிழக மக்களும் முஸ்லிம் மக்களும், யார் நமக்கானவர், யாரை ஆதரிக்க வேண்டும் என்று தெளிவான முடிவிலிருப்பவர்கள். இது தான் அடிப்படை” என்றார் தெளிவாக.

 

ஆனால் தேர்தல் களத்தின் தட்பவெட்பமோ கற்பனையையும் தாண்டியதாகத்தானிருக்கும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.