Skip to main content

தமிழக கவர்னர் மாற்றமா? புதிய கவர்னர் ரேசில் யார்? 

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

Will the Governor of Tamil Nadu change? Who is the new Governor

 

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் விரைவில் மாற்றப்படலாம் என்கிற தகவல் பரவி வருகிறது. புதிய கவர்னராக மத்திய சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என்றும் பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த ரேசில், ஹரியானாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரேந்திரசிங்கும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

 

தமிழக கவர்னராக கடந்த 2017, செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் பன்வாரிலால் புரோகித். மத்திய அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசுக்கு இணையாக பேரலல் கவர்மெண்ட்டை நடத்துவது போல ஆய்வு பணிகளையெல்லாம் மேற்கொண்டார். இது அப்போது பலத்த சர்ச்சைகளையும் உருவாக்கியது. 

 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, ஆட்சியை கைப்பற்றியதிலிருந்தே கவர்னரும் மாற்றப்படலாம் என்று பேச்சு அடிபட்டது. 

 

தற்போது மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு முன்பாக 8 மாநில கவர்னர்களை மாற்றியமைத்தார் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த். அந்த மாற்றலின் பட்டியலில் தமிழக கவர்னரும் இருக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் தமிழக அரசியலில் எதிரொலித்தது. ஆனால், அந்த பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. இதற்கிடையே, கவர்னர் மாற்றலின் இரண்டாவது பட்டியல் ரெடியாகி வருவதாக தகவல் கசிந்துள்ளது. 

 

தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்திரராஜனிடம் பாண்டிச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக இருப்பதால், பாண்டிச்சேரிக்கு முழு நேர துணை நிலை ஆளுநர் நியமிக்க வேண்டிய ஆலோசனையும் டெல்லியில் நடந்துள்ளது. அதனால், தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படும் போது பாண்டிச்சேரிக்கும் புதிதாக நியமிக்கப்படலாம். அல்லது பாண்டிச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து டாக்டர் தமிழிசை விடுவித்து முழு நேர ஆளுநராக நியமிக்கப்படலாம். தெலுங்கானாவுக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார். இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரேந்தர் சிங் உள்ளிட்ட சீனியர்கள் பெயர் அடிபடுவதாக டெல்லி வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆளுநர் Vs மாநில அரசு; வைக்கப்பட்ட வாதங்களும்.. நீதிபதியின் கண்டனங்களும்! 

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

Governor Vs State Government; Arguments and criticisms of the judge!

 

தமிழ்நாடு சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது. அரசின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பது உள்ளிட்ட ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராக கடந்த அக்.31ம் தேதி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. 

 

தமிழ்நாட்டிற்கு முன்பாக பஞ்சாப் அரசு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது இதே குற்றச்சாட்டைக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  தமிழ்நாடு வழக்கு தொடர்ந்து சில தினங்களிலேயே கேரளா அரசும் தங்கள் மாநில ஆளுநரான அரிஃப் முகமது கான் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

 

Governor Vs State Government; Arguments and criticisms of the judge!

 

பஞ்சாப் அரசு தொடர்ந்து வழக்கு விசாரணை கடந்த 6ம் தேதி, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும்” என கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. 

 

பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கை நவ.10 அன்று தமிழ்நாடு அரசு தங்கள் ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்குடன் சேர்ந்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. 

 

தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், மனு சிங்வி, முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைத்தனர். 

 

Governor Vs State Government; Arguments and criticisms of the judge!

 

அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், “காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை ஆளுநர்களின் செயல்பாடுகள் ஒரே மாதிரியாகத் தான் இருந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு மொத்தம் 12 மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அந்த மசோதாக்கள் எல்லாம் நிலுவையில் உள்ளன. ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகள் மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் இருக்கின்றன. 

 

பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க ஆளுநர் மறுப்பு தெரிவிக்கிறார். கிடப்பில் போட்டு வைத்து, அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்கிறார். பல வருடங்களாக சிறையில் வாடும் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு அனுப்பிய கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இது அரசின் உரிமையை பறிக்கும் விஷயம் என்றாலும், மற்றொரு பக்கம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

 

அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 200ல் உள்ள As Soon As Possible என்ற சொல்லை தவறாக ஆளுநர் புரிந்து கொண்டு காலம் தாழ்த்தி வருகிறார். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவதற்கு உரிமை கிடையாது” என்று வாதிட்டது. 

 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “ஆளுநர் ஆர்.என். ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இந்த வழக்கு மிகவும் முக்கியமானவை. 

 

அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின்படி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத நிலையில், மறுபரிசீலனைக்காக கூடிய விரைவில் ஆளுநர் சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.  அப்படி திருப்பி அனுப்பிய பிறகு மீண்டும் ஆளுநருக்கு அந்தக் கோப்பு வந்தால் அதன் மீது தாமதம் இல்லாமல் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

 

இந்த வழக்கில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளர் பதில் அளிக்கும்படியும், மத்திய அரசும் பதில் அளிக்கவும் நோட்டீஸ் வழங்க வேண்டும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். 

 

Governor Vs State Government; Arguments and criticisms of the judge!

 

மேலும், இந்த வழக்குடன் விசாரிக்கப்பட்ட பஞ்சாப் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். இந்த விவகாரம் மிகவும் ஆபத்தானது. ஆளுநருக்கு இதுபோன்ற அதிகாரங்களை கொடுத்தது யார்? ஆளுநர்கள் தாங்கள் செய்யும் தவறின் தீவிரத்தை உணர்கிறீர்களா இல்லையா? நடப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார். 

 

 

 

Next Story

''பன்வாரிலால் சொன்ன 50 கோடி;அதிமுக ஆட்சியில் நாம் கண்ட பலன் இதுதான்''- கே.எஸ்.அழகிரி பேச்சு

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

nn

 

தமிழகத்தை கொள்ளை அடித்தார்கள், சூறையாடினார்கள். அதிமுக ஆட்சியில் நாம் கண்ட பலன் இதுதான் என  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில்,''கரிகாலச் சோழன், ராஜேந்திர சோழன், ராஜராஜ சோழன், கம்பர், இளங்கோவடிகள், திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் இப்படியாக தமிழகத்தில் தோன்றிய பல்வேறு அறிஞர்களால் தமிழும் வாழ்ந்தது, தமிழகமும் புகழ்பெற்றது. தமிழர்களுடைய புகழ் இன்று உலகம் முழுமைக்கும் கொடிகட்டி பறக்கிறது என்று சொன்னால் இவர்களெல்லாம் எல்லாம் ஒரு காரணம்.

 

ஆனால் சென்ற முறை தமிழகத்தின் ஆளுநராக இருந்த புரோகித் இன்று பஞ்சாபில் சொல்லியிருக்கிறார். நான் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த பொழுது மிகுந்த அவமானத்திற்குட்பட்டேன். துணைவேந்தர் பதவிகள் 50 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அதை சீர்திருத்த நான் மிகவும் சிரமப்பட்டேன் என்று தமிழகத்தின் பெருமையை அவர் பஞ்சாபில் பறைசாற்றி இருக்கிறார். அதிமுக ஆட்சியில் நாம் கண்ட பலன் இதுதான். எதற்காக இந்த ஆட்சி நாம் அகற்றப்பட வேண்டும் என்று சொன்னோம் என்றால் அவர்கள் இவ்வாறெல்லாம் நடந்தது கொண்டதுதான். தமிழகத்தை கொள்ளை அடித்தார்கள், சூறையாடினார்கள், பாதுகாப்பிற்காக மோடி உடன் சேர்ந்து கொண்டார்கள். அதனால்தான் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். அதே ஆளுநர் வேறொன்றும் சொல்லியிருக்கிறார் தமிழகத்தை பார்த்து எப்படி ஆள வேண்டும் என்பதை பஞ்சாப் தெரிந்து கொள்ள வேண்டும் என்று  தமிழக அரசிற்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஒரு சான்றிதழ் வழங்கியிருக்கிறார். இது நமக்கு கிடைத்திருக்கும் பெருமை'' என்றார்.